2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இறுதி வரை றியல் மட்ரிட் போராடும்’

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் தமது வைரிகளான பார்சிலோனாவிடம் நடப்பு லா லிகா சம்பியன்களான றியல் மட்ரிட் தோல்வியடைந்தபோதும் லா லிகா தொடரின் இறுதி வரை போராடப் போவதான கருத்துகளை றியல் மட்ரிட் அணியின் தலைவர் சேர்ஜி றாமோஸ் தெரிவித்துள்ளார்.

தமது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதற் பாதியில் றியல் மட்ரிட்டே ஆதிக்கம் செலுத்தியிருந்தது. கரிம் பென்ஸூமாவின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தார்.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலிருந்து பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தியது. றியல் மட்ரிட்டின் மத்திய களத்தை உடைத்துக் கொண்டு வந்த இவான் றகிட்டிச் கொடுத்த பந்தை போட்டியின் 54ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் கோலாக்க பார்சிலோனா முன்னிலை தொடர்ந்தது.

இதையடுத்து, றியல் மட்ரிட் சார்பாக மாற்று வீரர்களான கரித் பேலும் மார்கோஸ் அஸென்ஸியோவும் களமிறங்கத் தயாராகவிருந்த நிலையிலேயே போட்டியின் திருப்புமுனையான விடயம் நடந்தேறியது. பார்சிலோனாவின் போலின்ஹோவின் உதையைக் கையால் தடுத்த றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் டனி கர்வகால் நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்குக் கிடைத்த பெனால்டியை லியனல் மெஸ்ஸி கோலாக்க 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா முன்னிலை வகித்தது.

இதன் பின்னர் களமிறங்கிய கரித் பேல் கோல் கம்பத்தை நோக்கி உதையொன்றை உதைந்திருந்தபோதும் அதை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்ட் அன்ட்றே டியர் ஸ்டீகன் தடுத்திருந்தார். இவ்வாறாக றியல் மட்ரிட்டால் கோலெதையும் பெறப்பட முடியாமல் போக, மறுபக்கம் மாற்று வீரராகக் களமிறங்கிய அலெக்ஸி விடால், லியனல் மெஸ்ஸி கொடுத்த பந்தை போட்டியின் இறுதி நிமிடத்தில் கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.

அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 45 புள்ளிகளுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் பார்சிலோனா தொடருகின்றது. பார்சிலோனாவை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள றியல் மட்ரிட், பார்சிலோனாவை விட 14 புள்ளிகள் குறைவாக 31 புள்ளிகளுடன் தரவரிசையில் நான்காமிடத்தில் இருக்கின்ற நிலையில், நடப்பு லா லிகா பருவகாலத்தில் றியல் மட்ரிட் சம்பியனாகுவதற்கான வாய்ப்புகள் முடிவடைந்துள்ளன என்றே கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .