2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இறுதிப் போட்டியில் பெயார்ண் மியூனிச்

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பெயார்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளது.

பெயார் 04 லெவர்குஸன் அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் அவ்வணியை வென்றே இறுதிப் போட்டிக்கு பெயார்ண் மியூனிச் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே தமதணியின் நட்சத்திர முன்கள வீரர் றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்ற கோலின் மூலமாக முன்னிலை பெற்ற பெயார்ண் மியூனிச், அடுத்த ஆறாவது நிமிடத்தில், தமது வீரர் பிராங் றிபெரி கொடுத்த பந்தை றொபேர்ட் லெவன்டோஸ்கி கோலாக்க தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.

எனினும் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோலொன்றைப் பெற்ற பெயார 04 லெவர்குஸன் அணியின் லார்ஸ் பென்டர், பெயார்ண் மியூனிச்சின் முன்னிலையை ஒரு கோலாகக் குறைந்த்தார்.

எவ்வாறெனினும், சக பெயார்ண் மியூனிச் வீரர் தியாகோ அல்கான்டராவிடமிருந்து பந்தைப் பெற்ற தோமஸ் முல்லர் போட்டியின் 52ஆவது நிமிடத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பெயார்ண் மியூனிச், போட்டியின் 61ஆவது நிமிடத்தில் தியாகோ அல்கான்டரா பெற்ற கோலின் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்த மூன்றாவது நிமிடத்தில், இன்னொரு சக பெயார்ண் மியூனிச் வீரரான ஆர்ஜன் ரொபினிடமிருந்து வந்த பந்தை கோலாக்கிய பெயார்ண் மியூனிச்சின் அணித்தலைவர் தோமஸ் முல்லர் தனது அணிக்கு 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்த ஆட்டத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய பெயார் 04 லெவர்குஸனின் லியோன் பெய்லி அபாரமான பிறீ கிக்கொன்றின் மூலம் போட்டியின் 72ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றார். எனினும் இதற்கடுத்த ஆறாவது நிமிடத்தில், தியாகோ அல்கான்டராவிடமிருந்து வந்த பந்தை தோமஸ் முல்லர் கோலாக்கியதோடு 6-2 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .