2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இறுதிப் போட்டியில் றியல் மட்ரிட்

Editorial   / 2018 மே 02 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு, சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் முன்னேறியுள்ளது.

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச்சின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த ஸ்பானிய லா லிகா கழகமான றியல்ட் மட்ரிட், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியின் மூன்றாவது நிமிடத்தில், தமது அணியின் தலைவர் சேர்ஜியோ றாமோஸ் தமது களப் பகுதியிலிருந்து பந்தொன்றை வெளியேற்றத் தவற, அதை பெயார்ண் மியூனிச்சின் ஜோஷுவா கிம்மிச் கோலாக்கி மொத்த கோல் எண்ணிக்கையை சமன்செய்தார்.

எனினும், அடுத்த எட்டாவது நிமிடத்தில் மார்ஷெல்லோ நுட்பபமாக உதைந்த உதையை தலையால் முட்டிக் கோலாக்கிய கரீம் பென்ஸீமா றியல் மட்ரிட்டுக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் பெயார்ண் மியூனிச்சின் கொரென்டின் டொலிஸோ பின்புறமாக கோல் காப்பாளர் ஸ்வென் உல்றிச்சிடம் கொடுத்த பந்தை அவர் கைப்பற்றத் தவற, அதைக் கைப்பற்றிய கரீம் பென்ஸீமா கோலைப் பெற றியல் மட்ரிட் இரண்டு மொத்த கோல்களால் முன்னிலையைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்த ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில், தனது உதையொன்று தடுக்கப்பட்டு மீண்டும் வர அதை றியல் மட்ரிட்டின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் றொட்றிகாஸ் கோலாக்கி மொத்த கோல் வித்தியாசத்தை ஒன்றாகக் குறைத்துக் கொண்டார். அந்தவகையில் மேலுமொரு கோலைப் பெற்று மொத்த கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தி எதிரணியின் மைதானத்தில் அதிக கோல்கள் பெறுகின்றமை காரணமாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கு பெயார்ண் மியூனிச் முயன்றபோதும் கொரென்டின் டொலிஸோ, தோமஸ் முல்லர் ஆகியோரின் உதைகளை றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் அபாரமாகத் தடுத்ததுடன் மற் ஹம்மெல்ஸ் தலையால் முட்டிய பந்தொன்று கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது. முடிவில், 2-2 என்ற கோல் கணக்கில் இப்போட்டி சமநிலையில் முடிய 4-3 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு றியல் மட்ரிட் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X