2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை எதிர் இந்தியா தொடர் நாளை

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், கொல்கத்தாவில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

இத்தொடரில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆறாமிடத்திலிருக்கும் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இத்தொடரில், இந்தியாவை இலங்கை 3-0 என வெள்ளையடித்தால் கூட இந்திய அணியின் முதல்நிலைக்கு பாதிப்பு ஏற்படாது. மறுபக்கம் இத்தொடரை இலங்கை வென்றால் ஆறாமிடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கிறது.

இத்தொடருக்கான இலங்கைக் குழாமில், இலங்கையணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெற்றிருப்பது இலங்கையணிக்கு பலத்தை வழங்குகிறது. மத்தியூஸ் இத்தொடரில் பந்துவீசமாட்டார் என்று கூறப்பட்டுள்ளபோதும் அண்மைய காலங்களில் சொல்லிக் கொள்ளும்படியாக ஓட்டங்களைப் பெற்றிருக்காத மத்தியூஸ் ஓட்டங்களைப் பெற்று மத்திய வரிசையை பலப்படுத்தினாலே இலங்கை அணி இந்தியாவுக்கு சவாலை வழங்கலாம்.

அடுத்து, அண்மைய காலத்தில் ஓட்டங்களைப் பெற்று வரும் டிமுத் கருணாரட்னவுடன் இளம் வீரரான சதீர சமரவிக்கிரம ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கைப்படுகையில், யாரை மூன்றாமிலக்க வீரராகக் களமிறக்குவது என்பதே இலங்கையணிக்கான இடியப்பச் சிக்கலாக இருக்கிறது. தொடர்ந்து ஓட்டங்களைப் பெறத் தடுமாறி வரும் லஹிரு திரிமான்னவா அல்லது மீண்டும் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள தனஞ்சய டி சில்வாவா என்றவாறே தெரிவு காணப்படுகிறது.

பந்துவீச்சுப் பக்கம் ரங்கன ஹேரத் இலங்கையணிக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ள போதும் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் தடுமாறுவது போல இந்தியாவில் ஹேரத்தின் பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது கவலை தரக்கூடியது. எவ்வாறெனினும் கொல்கத்தா ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனக் கூறப்படுகையில், சுரங்க லக்மாலுடன் இணைந்து லஹிரு கமகே இந்திய வீரர்களுக்கு சவாலை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியக் குழாமில் சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அணித் தேர்வில் இந்தியா சிக்கலை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கூறப்படுகையில், புவ்னேஷ்வர் குமாரே ஹர்டிக் பாண்டியாவுக்குப் பதிலாக அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், மேலதிக துடுப்பாட்ட வீரராக ரோஹித் ஷர்மாவை சேர்க்க வேண்டுமாயின் இரவீந்திர ஜடேஜா அல்லது இரவிச்சந்திரன் அஷ்வினை அணியிலிருந்து நீக்க வேண்டிய சிக்கலான நிலைமை காணப்படுகிறது. எவ்வாறெனினும் இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, புவ்னேஷ்வர் குமார் ஆகியோர் ஓரளவு துடுப்பாடக் கூடியவர்களாக இருப்பதால் இவர்கள் அனைவரும் அணியில் இடம்பெற்று ரோஹித் ஷர்மாவே அணிக்கு வெளியே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களிலும் முரளி விஜய், லோகேஷ் ராகுல், ஷீகர் தவான் ஆகிய மூவரில் இருவரைத் தெரிவுசெய்ய வேண்டிய கடினமான நிலையில் இந்திய அணித் தலைவர் விராத் கோலி காணப்படுகின்றார். ஆரம்பபத் துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோரே களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X