2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் சிம்பாப்வே டெஸ்ட் இன்று ஆரம்பம்

Editorial   / 2017 ஜூலை 14 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைத் தொடர்ந்து, ஒற்றை டெஸ்ட் போட்டி, இன்று ஆரம்பிக்கவுள்ளது. புதிய தலைவர் டினேஷ் சந்திமாலின் கீழ், இலங்கை அணி களமிறங்குகிறது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி, அண்மைக்காலமாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தடுமாறியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு சிறந்த பெறுபேறுகளையே வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 11ஆவது இடத்திலுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக, சொந்த நாட்டிலேயே வைத்துத் தொடரை இழந்து விட்டு, பின்னர் அந்த நாட்டையே டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்ளும் அழுத்தத்தை, இலங்கை கொண்டுளளது.

இவற்றுக்கு மேலதிகமாக, கடந்த நான்கரை ஆண்டுகளாக அணித்தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அணியில் அவரது பங்களிப்பு எவ்வாறு அமையுமென்ற கேள்வியும் காணப்படுகிறது.

மறுபக்கமாக, புதிய தலைவர் சந்திமாலின் கீழ், புத்துணர்வுடன் களமிறங்கக்கூடிய வாய்ப்பும், இலங்கைக்குக் காணப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் 7ஆவது இடத்தில் காணப்படும் இலங்கை அணி, இந்தப் போட்டியில் சிறப்பான வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டால், களத்துக்கு வெளியே காணப்படும் ஏராளமான பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும்.

இலங்கை அணியின் பிரதானமான நம்பிக்கையாக, சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தே காணப்படுகிறார். அவர் தனது மாயச்சுழலை வெளிப்படுத்துவாராயின், இலங்கை அணிக்கு வெற்றி கிடைப்பது, ஓரளவு உறுதியாகிவிடும். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடும் அவர், இறுதியில் மார்ச் மாதத்திலேயே போட்டியொன்றில் விளையாடியிருந்தார். எனவே, போட்டிக்கான தகுதியுடன் அவர் காணப்படுவாரா என்பதே, பிரதானமான சவாலாக அமையவுள்ளது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தனுஷ்க குணதிலக, தனது அறிமுகத்தை மேற்கொள்வது ஓரளவு உறுதியாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.

மறுபக்கமாக, சிம்பாப்வே அணியைப் பொறுத்தவரை, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பெறப்பட்ட வெற்றி, அவ்வணிக்கு உற்சாகத்தை வழங்கியிருக்கிறது. தொடரின் நாயகனாகத் தெரிவான ஹமில்டன் மஸகட்ஸா, டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாகச் செயற்படுவாரென, அவ்வணி எதிர்பார்க்கிறது.

எனவே, இலங்கை அணிக்கான தெளிவான வாய்ப்புகள் தென்பட்டாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைப் போலவே, அதிர்ச்சியை வழங்கக்கூடிய அத்தனை திறன்களையும், சிம்பாப்வே அணி கொண்டிருக்கிறது என்றே கருதப்படுகிறது.

(புகைப்படம்: பிரதீப் டில்ருக்‌ஷன)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X