2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா: இரண்டாவது டெஸ்ட் நாளை

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்ப்பிகின்றது.

காலியில் இடம்பெற்ற இத்தொடரின் முதலாவது டெஸ்டில், டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத்தின் சுழலில் தென்னாபிரிக்க அணி சுருண்ட நிலையில், வழமையாக எஸ்.எஸ்.சி ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமானதாகவே காணப்படுகின்றபோதும் காலி ஆடுகளம் போலில்லாது விட்டாலும் போட்டியின் மூன்றாவது நாளிலிருந்தாவது சுழற்சியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், சுழற்பந்துவீச்சை தென்னாபிரிக்க அணி எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதிலேயே அந்த அணியின் வெற்றிவாய்ப்புகள் தங்கியுள்ளன. இதற்கு, தென்னாபிரிக்க அணியில் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய சிரேஷ்ட வீரர் ஹஷிம் அம்லா, அணித்தலைவர் பப் டு பிளெஸியுடன் சேர்ந்து ஏய்டன் மர்க்ரம் போன்ற இளம் வீரர்களை வழிநடத்த வேண்டியதாகவுள்ளது.

இந்நிலையில், குடும்ப காரணங்களுக்கான இவ்வார ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்குச் சென்றிருந்த முதலாவது டெஸ்டில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் தப்ரையாஸ் ஷம்சி மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ள நிலையில், முதலாவது டெஸ்டில் களமிறங்கிய அதே தென்னாபிரிக்க அணியே இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையணியும் முதலாவது போட்டியில் களமிறங்கிய அதேயணியே இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், காலி ஆடுகளத்தை விட ஓரளவுக்கு வேகப்பந்துவீச்சுக்கு எஸ்.எஸ்.சி ஆடுகளம் ஒத்துழைக்கும் என்பதால், மூன்றாவது சுழற்பந்துவீச்சாளர் லக்‌ஷன் சந்தகானுக்குப் பதிலாக வேகமாகப் பந்துவீசக்கூடிய லஹிரு குமார அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதேவேளை, முதலாவது டெஸ்டில் திமுத் கருணாரத்ன மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தமையில், போட்டித் தடை காரணமாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் இல்லாத நிலையில், சிரேஷ்ட வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ், றொஷேன் சில்வா ஆகியோரும் இளம் வீரர்கள் குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரும் ஓட்டங்களைப் பெற்றாலே தென்னாபிரிக்க அணியை இலங்கை வீழ்த்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளுக்கான தரவரிசையில் தென்னாபிரிக்கா இரண்டாமிடத்திலும் இலங்கை ஆறாமிடத்திலும் உள்ள நிலையில் இப்போட்டியின் முடிவு தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X