2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா: ஒ.நா.ச.போ தொடர் ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஜூலை 27 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், தம்புள்ளையில் நாளை மறுதினம் காலை 9.45க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இலங்கையணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 எனத் தோற்கடிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணி, இந்த ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலாவது இலங்கையை பழிவாங்கும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபக்கமாக, டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு சிறப்பான பெறுபேற்றை அண்மைக் காலங்களில் இலங்கையணி வெளிப்படுத்தி வந்தாலும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கையணியின் திறமை வெளிப்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அந்தவகையில், சுழற்பந்துவீச்சுக்கு டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி தடுமாறியிருந்த நிலையில், சுழற்பந்துவீச்சை பிரதானமாகப் பாவித்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருக்கும் தென்னாபிரிக்க அணிக்கெதிராக சிறப்பான பெறுபேற்றை வெளிக்காட்ட இலங்கையணி முயலும்.

அந்தவகையில், அண்மைய காலங்களில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான ஆடுகளங்கள் ஓட்டங்கள் குவிக்கப்படுவதுக்கெற்றவாறே வடிவமைக்கப்பட்டாலும் இலங்கை ஆடுகளங்களில் பெரிதாக ஓட்டங்கள் குவிக்க முடியாதென்பதுடன் டெஸ்ட் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு தென்னாபிரிக்க அணி தடுமாறியிருந்த நிலையில் இத்தொடருக்கான ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக அமைந்தால் ஆச்சரியப்படுவதுக்கில்லை.

தரவரிசையில் மூன்றாமிடத்திலிருக்கும் தென்னாபிரிக்க அணி, இத்தொடரில் 5-0 என இலங்கையை வெள்ளையடித்தால் அல்லது 4-1 என வென்றாலே தமது மூன்றாமிடத்தைத் தக்க வைக்க முடியும். 3-2 என தொடரை வென்றால் கூட நான்காமிடத்துக்கு தென்னாபிரிக்க அணி கீழிறங்கும் என்பதோடு, 5-0 என இலங்கையணியால் வெள்ளையடிக்கப்பட்டால் ஐந்தாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கமாக, இத்தொடரில் எந்த முடிவு பெறப்பட்டாலும் எட்டாமிடத்திலேயே இலங்கை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .