2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கை எதிர் நியூசிலாந்து: 2ஆவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கின்றது

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஆறாமிடத்தில் காணப்படும் இலங்கை இப்போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டுள்ளதோடு, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் சுளையாக மேலும் 60 புள்ளிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மறுபக்கமாக, தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்படும் நியூசிலாந்து, இப்போட்டியில் தோல்வியடையும் அல்லது வெற்றி தோல்வியின்றி முடிக்கும் சந்தர்ப்பத்தில் இரண்டாமிடத்திலிருந்து நான்காமிடத்துக்கு கீழிறங்க வேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவது டெஸ்டில் தமது துடுப்பாட்டத்தின் முதுகென்பான அணித்தலைவர் கேன் வில்லியம்சன் பிரகாசிக்காததால் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த நியூசிலாந்து, தொடரைச் சமப்படுத்தவும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முன்னேற்றத்தை நிகழ்த்தவும் அவரிலும், சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் றொஸ் டெய்லரிடமே தங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையிலுள்ள மைதானங்களில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாக கொழும்பு பி சரவணமுத்து மைதானம் காணப்படுகின்ற நிலையில், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட், டிம் செளதியை ஆபத்த்தானவர்களாக இம்மைதானம் மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தவிர, மிற்செல் சான்ட்னெரை இப்போட்டியில் பிரதியிடக்கூடிய கொலின் டி கிரான்ட்ஹொம்மும் நியூசிலாந்துக்கு மேலும் பலத்தை வழங்கலாம்.

மறுபக்கமாக, அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப்பாணி குறித்து முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர் முன்னையதைப் போன்ற நம்பிக்கையுடன் மீண்டும் விளையாடுவாரா என்பது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுவது இலங்கையின் பெறுபேற்றைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. அந்தவகையில், அவரை லக்‌ஷன் சந்தகான் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதேவேளை, சரவணமுத்து மைதானமானது வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனக் கருதப்படுகையில் சுரங்க லக்மாலின் பங்களிப்பு இப்போட்டியில் மேலும் உணரப்படும் எனத் தெரிவதுடன், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரின் உறுதியான பங்களிப்புகளும் பெறப்படும் பட்சத்தில் 2-0 என இலங்கை தொடரைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .