2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஜூன் 06 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ட்ரினிடாட்டில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஆறாமிடத்தில் காணப்படும் இலங்கையணி, இத்தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தாலும் ஆறாமிடத்திலேயே தொடரும் என்றபோதும் முன்னேறிவரும் இளம் வீரர்களுக்கான சிறந்த அனுபவமாக இத்தொடர் அமைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மறுபக்கமாக, இத்தொடரை 2-0 அல்லது 3-0 என மோசமாக இழந்தால் ஏழாமிடத்துக்கு இலங்கை கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விண்ணர்களாகவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தடுமாறி வருகின்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஒன்பதாமிடத்தில் காணப்படுகின்றது. இந்நிலையில், சொந்த மண் என்ற சாதகமான காரணியைக் கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் இத்தொடரை வெல்லும் பட்சத்தில் ஏழாமிடத்துக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையணியின் துடுப்பாட்ட வரிசையை நோக்குமிடத்து, அணித்தலைவர் தினேஷ் சந்திமால், சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோருடன் இளம் வீரர்கள் குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, றொஷேன் சில்வா உள்ளிட்டோர் பிரகாசிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக வழமையான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன இல்லாத நிலையில், பயிற்சிப் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய குசல் பெரேரா ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சுப் பக்கம் ரங்கன ஹேரத், சுரங்க லக்மாலோடு லஹிரு குமார, அகில தன்ஞ்சய ஆகியோர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு பிறகு டெவோன் ஸ்மித் இடம்பெற்றுள்ள நிலையில், இவர் அணியில் ஷிம்ரோன் ஹெட்மயரை பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும்படி அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டருடன் ஐந்து பந்துவீச்சாளர்கள் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .