2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உலகக் கிண்ணத்திலிருந்து விலகினார் ரஸல்

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளின் சிரேஷ்ட சகலதுறைவீரர் அன்ட்ரே ரஸல் விலகியுள்ளார்.

முழங்கால் காயமொன்று காரணமாகவே உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அன்ட்ரே ரஸல் விலகியுள்ள நிலையில், இவரது பிரதியீடாக துடுப்பாட்டவீரர் சுனில் அம்பிறிஸை சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதித்துள்ளது.

வரலாற்று ரீதியாக முழங்கால் பிரச்சினைகளைக் கொண்டிருந்த அன்ட்ரே ரஸல், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் தனது இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை பாகிஸ்தானுக்கெதிராகவே விளையாடியபோது பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் அன்ட்ரே ரஸல் விளையாடியிருந்தபோதும் இரண்டாவது கட்டமாக பந்துவீசவில்லை என்பதோடு, இங்கிலாந்துக்கெதிராக இரண்டு ஓவர்களும், பங்களாதேஷுக்கெதிராக ஆறு ஓவர்களுமே பந்துவீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் அன்ட்ரே ரஸல் பங்கேற்றிருக்கவில்லை.

அந்தவகையில், தயார்நிலை வீரர்களில் கெரான் பொலார்ட், டுவைன் பிராவோ போன்றோர் அன்ட்ரே ரஸலின் நேரடிப் பிரதியீடாக அமைகின்றபோதும், நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் பின்தொடை தசைநார் உபாதைக்குள்ளான எவின் லூயிஸுக்கும் பிரதியீடைக் கொண்டிருக்கும் முகமாகவே சுனில் அம்பிறிஸ் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தாம் இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள், அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறாது என்றே கருதப்படுகின்ற நிலையில், ஓல்ட் டரஃபோர்ட்டில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .