2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணத்தில் 4ஆம் இலக்கத்தில் கோலி?

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இவ்வாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளின் போது, இந்தியாவின் 4ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக, அவ்வணியின் தலைவரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரருமான விராத் கோலி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அவ்வணியின் பயிற்றுநரான ரவி ஷாஸ்திரி, இது தொடர்பாக ஆராய்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான றோகித் ஷர்மா, ஷீகர் தவான் ஆகியோர் சிறப்பாகச் செயற்படுவதோடு, 3ஆம் இலக்கத்தில் கோலி, அசைக்க முடியாத வீரராக மாறியுள்ளார். மகேந்திரசிங் டோணியின் துடுப்பாட்டம் தொடர்பானகேள்விகள் காணப்படுகின்ற போதிலும், 5ஆம் இலக்கத்தில் அவர் துடுப்பெடுத்தாடுவது ஓரளவுக்கு உறுதியாகக் காணப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியில், 4ஆம், 6ஆம் இலக்கங்கள் தொடர்பில், இந்தியாவுக்குக் கேள்விகள் காணப்படுகின்றன. அம்பத்தி ராயுடு, கேதார் யாதவ் ஆகியோர், ஒரளவுக்குச் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் என்றாலும், முழுமையான நம்பிக்கை அவர்கள் மீது ஏற்படவில்லை.

இந்நிலையிலேயே, கோலியை 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட வைத்துவிட்டு, ராயுடு போன்ற ஒருவரை, 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட வைப்பதைப் பற்றி ஆராய்வதாக, ஷாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக, இங்கிலாந்தின் கிரிக்கெட் பருவகாலம் ஆரம்பிக்கும் காலத்தில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தின் போது, பந்து அதிகமாக ஸ்விங் செய்தால், அதிலிருந்து கோலியைக் காப்பாற்ற முடியும் என்ற வகையான கருத்தையும், ஷாஸ்திரி வெளிப்படுத்தினர். “இருதரப்புத் தொடர்கள் பற்றி நான் கருத்திலெடுக்கவில்லை. ஆனால், [ஆடுகள நிலைமை, பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தால்] உலகக் கிண்ணப் போட்டியொன்றில், எனது மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரரை, எதற்காக நான் விரைவில் இழக்க வேண்டும்?” என, ஷாஸ்திரி கேள்வியெழுப்பினார்.

இந்திய அணியின் மத்திய வரிசைப் பிரச்சினைகளுக்கு மத்தியில், விராத் கோலியை, 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாட வைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டால், முக்கியமானதும் சர்ச்சையானதுமான மாற்றமாக அது அமையும்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 214 இனிங்ஸ்களில் 39 சதங்கள் உள்ளடங்கலாக 59.50 சராசரியில் 10,533 ஓட்டங்களை, கோலி பெற்றுள்ளார். அவற்றுள் 8,440 ஓட்டங்களை 62.98 என்ற சராசரியில், 32 சதங்களோடு, 3ஆம் இலக்கத்தில் கோலி பெற்றிருக்கிறார். நான்காம் இலக்கத்தில், 7 சதங்கள், 58.13 என்ற சராசரி என்ற, சிறப்பான நிலையை அவர் கொண்டுள்ள போதிலும், அவரது 3ஆம் இலக்கத்தோடு ஒப்பிடும் போது, அது வீழ்ச்சியே. அதேபோல், இறுதியாக 2015ஆம் ஆண்டிலேயே, 4ஆம் இலக்கத்தில் கோலி துடுப்பெடுத்தாடியிருந்தார் என்பதுவும் ஞாபகப்படுத்தப்பட வேண்டியது.

அதேபோல், அவ்வாறான முடிவு, ராயுடு மீது காணப்படும் நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்துமெனக் கருதப்படுகிறது. ராயுடுவிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான ஓட்டக் குவிப்புப் போதுமானளவு கிடைக்கவில்லை என்ற பார்வைக்கு மத்தியிலும், அண்மைக்காலத்தில் ஓரளவு சிறப்பான பெறுபேற்றையே அவர் கொண்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில், 4ஆம் இலக்கத்தில் குறைந்தது 10 தடவைகளாவது துடுப்பெடுத்தாடியோரின் சராசரிகளை வைத்துப் பார்த்தால், 4ஆவது நிலையில் அவர் இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் 4ஆம் இலக்கத்தில் அவரது 53.87 என்ற சராசரி, அவரது சாதாரண சராசரியான 50.33 என்பதை விடவும் அதிகமானதாகும்.

அவரது சராசரியைத் தாண்டி, அவரது அடித்தாடும் வீதமும், 89.23 என்ற, ஓரளவுக்குச் சிறப்பான நிலையில் தான் காணப்படுகிறது. இது, 4ஆம் இலக்கத்தில் பிரகாசித்த றொஸ் டெய்லர், ஃபப் டு பிளெஸி ஆகியோரை விடச் சிறந்த நிலையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .