2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக் கிண்ணத்தில் ஆர்ஜென்டீனா

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளின் முடிவில், ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், போர்த்துக்கல், கொலம்பியா, உருகுவே ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், சிலி, நெதர்லாந்து போன்ற அணிகள் உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறியுள்ளன. தகுதிகாண் போட்டிகளின் இறுதிநாளான நேற்றே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது.

தனது இறுதி தகுதிகாண் போட்டியில், தென்னமெரிக்க பிரிவில் ஆறாமிடத்தில் ஆரம்பித்த ஆர்ஜென்டீனா, ஈக்குவடோருக்கெதிரான தனது இறுதி தகுதிகாண் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மூன்றாமிடத்தைப் பெற்று உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுக் கொண்டது.

தென்னமெரிக்க பிரிவில், முதல் நான்கு அணிகளும் நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறுவதோடு, ஐந்தாவது அணி தகுதிப் போட்டியில் விளையாட வேண்டுமென்று காணப்பட்ட நிலையில், மேற்படி போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆறாமிடத்தில் காணப்பட்ட ஆர்ஜென்டீனா உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற முடியாத நிலை காணப்பட்டது. எனினும், கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற போட்டியில், லியனல் மெஸ்ஸியின் மூன்று கோல்களோடு வெற்றிபெற்று உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுக் கொண்டது.

இதேவேளை, தனது இறுதி தகுதிகாண் போட்டியில், 0-3 என்ற கோல் கணக்கில், ஏற்கெனவே உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்ற பிரேஸிலிடம் தோல்வியடைந்த சிலி, தென்னமெரிக்க பிரிவில் ஆறாமிடத்தைப் பெற்று, உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இழந்தது. அந்தவகையில், பிரேஸில், ஆர்ஜென்டீனாவோடு, கொலம்பியா, உருகுவே ஆகியன உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக, தென்னமெரிக்காவிலிருந்து தகுதிபெற்றுள்ளதோடு, ஐந்தாமிடம் பெற்ற பெரு, தகுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய பிரிவு தகுதிகாண் போட்டிகளில், தமது இறுதிப் தகுதிகாண் போட்டிகளில், முறையே சுவிற்ஸர்லாந்தையும் பெலாரஸையும் வென்ற போர்த்துக்கல்லும் பிரான்ஸும் தத்தமது குழுக்களில் முதலிடம் பெற்று உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் மூன்றாமிடம் பெற்ற நெதர்லாந்து, தமது இறுதி குழுநிலைப் போட்டியில் ஏழு கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலே தகுதிப் போட்டிக்குச் செல்லலாம் என்ற நிலையில், 2-0 என்ற கோல் கணக்கில் மட்டும் சுவீடனை வென்று, உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .