2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணத்தில் மலிங்க இல்லை?

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது உட்பட, தனது அண்மைய மீள்வருகையில் நான்கு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்க கைப்பற்றியபோதும் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகத்துக்கிடமானதாகவே காணப்படுகின்றது.

ஏனெனில், கருத்துத் தெரிவித்துள்ள மலிங்க, தனக்கு அண்மைய காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது உலகக் கிண்ணத்தில் வாய்ப்புக் கிடைக்குமென தான் எதிர்பார்க்கவில்லையெனக் கூறியுள்ளார். இதுதவிர, குறித்த போட்டியில் இங்கிலாந்தின் இனிங்ஸ் முடிவில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலில் உலகக் கிண்ணம் வரை விளையாடுவது குறித்து வினவப்பட்டபோது தான் அடுத்த போட்டி குறித்து மாத்திரமே கருத்திற் கொள்வதாக மலிங்க கூறியிருந்தார்.

எவ்வாறெனினும், உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் தான் விளையாடுவேன் எனத் தெரிவித்த மலிங்க, அதுவே தனது இறுதி உலகக் கிண்ணமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ஏறத்தாழ, ஒன்றரை ஆண்டுகளாக இலங்கையணியில் இடம்பெறாமலிருந்த மலிங்க, இவ்வாண்டு ஆரம்பத்தில் இந்தியன் பிறீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகரொருவராகப் பணியாற்றியிருந்த மலிங்க, மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரைத் தவறவிட்டிருந்தார்.

எனினும், கனடா பூகோள இருபதுக்கு – 20 தொடரிலும் மாகாணங்களுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரிலும் விளையாடிய பின்னரே ஆசியக் கிண்ணத்தில் மலிங்க இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில், மலிங்கவின் பந்துவீசும் வேகம் குறைவடைந்ததும் அவர் அணியில் இடம்பெறாமைக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்ற நிலையில், ஆசியக் கிண்ணத்தில் சில தடவைகள் மணிக்கு 140 கிலோமீற்றருக்கு அதிகமாக பந்துவீசியிருந்த மலிங்க, இங்கிலாந்துக்கெதிரான குறித்த போட்டியிலும் சில தடவைகள் 140 கிலோமீற்றர் வேகத்துக்கு அதிகமாக பந்துவீசியிருந்தார்.

எனினும், மலிங்க குறிப்பிடத்தக்களவான பந்துகளை மெதுவாகவே மலிங்க வீசியிருந்த நிலையில், இவ்வாறான மலிங்கவையே இனிப் பார்க்கப் போகின்றோமா என வினவப்பட்டதுக்கு, தனது கிரிக்கெட் விளையாடும் காலத்தின் இறுதியில் இருப்பதாகவும் தான் எவ்வளவு காலம் இன்னமும் விளையாடுவேன் எனத் தெரியாது என்று கூறியதுடன் தேர்வு குறித்து என்ன திட்டமிட்டுள்ளார்கள் அவர்களின் மனதில் என்ன உள்ளது எனத் தெரியாது என்று கூறியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X