2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எப்.ஏ கிண்ணத் தொடரில் சம்பியனானது ஆர்சனல்

Editorial   / 2017 மே 29 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே விலகல் முறையில் இடம்பெற்று வந்த எப்.ஏ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், செல்சியை வென்ற ஆர்சனல், சம்பியனாகியுள்ளது.  

வெம்ப்ளியில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சியே வெற்றிபெறுமென்று எதிர்பார்க்கப்பட்டபோதும், சிறப்பான திறமையை வெளிப்படுத்திய ஆர்சனல், தமது 13ஆவது எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டி வெற்றியைப் பெற்றுக்கொண்டது.  

இதேவேளை, கடந்த 21 ஆண்டுகளாக, ஆர்சனலின் முகாமையாளராக இருந்து வரும் ஆர்சீன் வெங்கர், இப்பருவகாலத்திலேயே, முதன்முறையாக, ஆர்சனலை சம்பியன்ஸ் லீக்குக்கு அழைத்துச் செல்லாத நிலையில், தனது ஏழாவது எப்.ஏ கின்ண இறுதிப் போட்டி வெற்றியைப் பெற்று, ஆறுதலடைந்து கொண்டார்.  

இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே கோலொன்றைப் பெற்ற அலெக்ஸிஸ் சந்தேஸ், ஆர்சனலுக்கு முன்னிலையை வழங்கினார். எவ்வாறெனினும், சர்ச்சைக்குரியதாகவே இக்கோல் அமைந்திருந்தது. ஏனெனில், ஆரோன் றம்ஸி “ஓப் சைட்”-இல் இருந்தார் என துணை மத்தியஸ்தர் தெரிவித்திருந்த போதும், மத்தியஸ்தர் அந்தோனி டெய்லர், அதை நிராகரித்து, கோல் என அறிவித்திருந்தார். தான் பந்தில் தொடுகையை மேற்கொள்ளவில்லை என றம்ஸி தெரிவித்த நிலையில், சந்தேஸ், பந்தைக் கையால் கையாண்டார் என, செல்சி வீரர்கள்,  மத்தியஸ்தரிடம் முறையிட்டிருந்தனர்.  

ஆரம்பத்தில் பெறப்பட்ட இக்கோலைத் தொடர்ந்து, போட்டியின் 76ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற டியகோ கொஸ்டா,  கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். எவ்வாறெனினும், அடுத்த மூன்றாவது நிமிடத்தில், ஒலிவர் ஜிரோட்டிடமிருந்து பெற்ற பந்தை, தலையால் முட்டி கோலாக்கிய றம்ஸி, ஆர்சனலுக்கு, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.  

ஆர்சனலின் பின்கள வீரர்களான, பியர் மெர்த்துஸாக்கர், றொப் ஹோல்டிங் ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டிருந்த நிலையில், முன்களத்தில், மெசூட் ஏஸி,ல் அபாரமாகச் செயற்பட்டிருந்தார். தாம் பெற்ற இரண்டு கோல்கள் தவிர, ஏராளமான கோல் பெறும் வாய்ப்புகளை ஆர்சனல் உருவாக்கியிருந்தது. டனி வெல்பக், றம்ஸி, ஏஸில் ஆகியோரின் தலா ஒவ்வோர் உதைகள், கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், செல்சியின் மத்திய பின்கள வீரரான கரி காஹில், இரண்டு உதைகளை அபாரமாகத் தடுத்திருந்தார்.  

மறுபக்கமாக, செல்சியின் முக்கிய வீரர்களான ஈடின் ஹஸார்ட், என் கலோ காண்டே ஆகியோர், தமது வழமையான ஆட்டத்தை வெளிபடுத்தியிருக்கவில்லை. ஆர்சனலில் சிறப்பான ஆட்டமே இதற்குரிய காரணமாய் அமைந்தது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .