2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஓய்வு பெற்றார் ஜல்லூயிஜி புபான்

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான தகுதிப் போட்டியில் சுவீடனிடம் தோல்வியடைந்து, உலகக் கிண்ணத்துக்கு இத்தாலி தகுதிபெறாமையைத் தொடர்ந்து, இத்தாலியின் தலைவரும் கோல் காப்பாளருமான ஜல்லூயிஜி புபான் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

39 வயதான ஜல்லூயிஜி புபான் 1997ஆம் ஆண்டு ரஷ்யாவுக்குகெதிராக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டு, 20 ஆண்டுகளுக்கு மேலான விளையாடும் காலத்தில் 175 போட்டிகளில் இத்தாலியை பிரதிநிதித்துவப்படுத்தியதோடு 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தையும் வென்றிருந்தார்.

இதேவேளை, ஜல்லூயிஜி புபானின் ஜுவென்டஸ் கழக சக பின்கள வீரர்களான அன்டிரியா பர்ஸாலி, ஜோர்ஜியோ செலினி ஆகியோரும் றோமாவின் மத்தியகள வீரரான டேனியல் டி றோசி ஆகியோரும் குறித்த போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

36 வயதான அன்ட்ரியா பர்ஸாலி, இத்தாலி சார்பாக 73 போட்டிகளில் விளையாடியதுடன், 33 வயதான ஜோர்ஜியோ செலினி இத்தாலி சார்பாக 96 போட்டிகளில் விளையாடியதுடன் எட்டுக் கோல்களையும் பெற்றிருந்தார். 34 வயதான டேனியல் டி றோசி, 117 தடவைகள் இத்தாலியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் 21 கோல்களை இத்தாலி சார்பாகப் பெற்றிருந்தார்.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு வரை ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கும் இத்தாலியின் முகாமையாளரான ஜியம்பியரோ வென்டூராவின் தீர்மானங்கள் பலத்த விமர்சனத்தைச் சந்தித்திருந்த நிலையில் ஜியம்பியரோ வென்டூரா பதவி விலகுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்கள வீரர் லொரென்ஸோ இன்சீனியாவை களமிறக்காமை பலத்த விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியக் கழகமான பெயார்ண் மியூனிச்சால் அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட கார்லோ அன்சிலோட்டி, ஜியம்பியரோ வென்டூராவைப் பிரதியீடு செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .