2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கம்யூனிட்டி கேடயப் போட்டியில் லிவர்பூலை வென்றது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க கம்யூனிட்டி கேடயப் போட்டியில், கடந்த பருவகால இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற லிவர்பூலை, கடந்த பருவகால இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

வெம்ப்ளியில் நேற்று  இடம்பெற்ற குறித்த போட்டியில், சக மத்தியகளவீரர் கெவின் டி ப்ரூனேயிடமிருந்து பெற்ற பந்தை மன்செஸ்டர் சிற்றியின் அணித்தலைவரும் மத்தியகளவீரருமான டேவிட் சில்வா, சக முன்களவீரரான ரஹீம் ஸ்டேர்லிங்கிடமிடம் வழங்க அவர் அதனை கோல் கம்பத்துக் அருகில் இருந்து போட்டியின் 12ஆவது நிமிடத்தில் கோலாக்கிய நிலையில் மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், முதற்பாதியில் வேறெந்த கோலும் பெறப்படாத நிலையில் மன்செஸ்டர் சிற்றி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், போட்டியின் 77ஆவது நிமிடத்தில் சக பின்களவீரர் வேர்ஜில் வான் டிஜிக் வழங்கிய பந்தை லிவர்பூலின் பின்களவீரரான ஜோயல் மட்டிப் தலையால் முட்டிக் கோலாக்கி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இதேவேளை, போட்டியின் இறுதிக் கணங்களில் லிவர்பூல் கோல் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருந்தபோதும், குறிப்பாக லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலாவால் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டப்பட்ட பந்தை மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான கைல் வோக்கர் கோல் எல்லையில் வைத்து மேலெழும்பி பின்புறமாக அபாரமாகத் தடுத்த நிலையில் போட்டி வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்து பெனால்டி மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது.

அந்தவகையில், பெனால்டியில் மன்செஸ்டர் சிற்றியின் இல்கி குன்டோகன், பெர்னார்டோ சில்வா, பில் பொடென், ஒலெக்ஸான்டர் ஸின்சென்கோ, கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்த நிலையில், லிவர்பூலின் ஸ்கொட்ரான் ஷகி, அடம் லலானா, அலெக்ஸ் ஒக்ஸ்லேட்-சம்பர்லின், மொஹமட் சாலா ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியபோதும் ஜோர்ஜினியோ விஜ்னால்டுமின் பெனால்டியை மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோ தடுத்த நிலையில் 5-4 என்ற ரீதியில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

இந்த கம்யூனிட்டி கேடயப் போட்டிகளில் வழமையாக நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களும், கால்பந்தாட்ட சங்க கிண்ணத் தொடரின் சம்பியன்களுமே மோதுகின்றபோதும், அதுவிரண்டும் மன்செஸ்டர் சிற்றியாக கடந்த பருவகாலத்தில் இருந்தமையால், கடந்த பருவகால பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற லிவர்பூலுடன் மன்செஸ்டர் சிற்றி மோதியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .