2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கரியுஸின் தவறுகள், பேலின் அபாரத்தால் சம்பியனானது றியல் மட்ரிட்

Editorial   / 2018 மே 27 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சம்பியனாகியுள்ளது.

உக்ரேனின் தலைநகர் கீவ்வில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலை வென்றே, கடந்த ஐந்தாண்டுகளில் நான்காவது தடவையாக சம்பியன்ஸ் லீக் தொடரில் றியல் மட்ரிட் சம்பியனானது.

இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த லிவர்பூலின் நட்சத்திர முன்கள வீரர் மொஹமட் சாலா விழும்போது அவரின் கையை றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் பிடித்துக் கொண்டு வீழ்ந்ததில் காயமடைந்த அவர் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் அடம் லலானாவால் பிரதியீடு செய்யப்பட்டார்.

இதேவேளை, றியல் மட்ரிட்டின் வலது பின்கள வீரரானான டனி கர்வகால் அடுத்த ஏழாவது நிமிடத்தில் காயமடைந்த நிலையில், நாச்சோவால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முதற்பாதி முடிவடையும் தருணத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டிய பந்தை லிவர்பூலின் கோல் காப்பாளர் லொரிஸ் கரியுஸ் தடுக்க, தன் பாதையில் வந்த பந்தை கரிம் பென்ஸீமா கோல் கம்பத்துக்குள் செலுத்தியபோதும் அவர் ஓவ் சைட்டில் இருந்ததன் காரணமாக அக்கோல் நிராகரிக்கப்பட முதலாவது பாதியில் கோலெதுவும் பெறப்படவில்லை.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில், அடம் லலானா பந்தைக் கட்டுப்படுத்தத் தவற, அப்பந்தையெடுத்துக் கொண்டு லொரியுஸ் கரியுஸைத் தாண்டிச் சென்றி றியல் மட்ரிட்டின் இஸ்கோ உதைந்தபோதும் அது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், போட்டியின் 51ஆவது நிமிடத்தில், தனதணியின் பின்கள வீரர் டெஜன் லொவ்ரேனிடமிருந்து வந்த பந்தைப் பிடித்து லொரியுஸ் கரியுஸ் எறிய முற்பட்ட நிலையில், அவருக்கருகிலிருந்து கரிம் பென்ஸீமா காலை நீட்ட பந்து அவரின் பட்டு காலில் பட்டு கோலாக றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும் அடுத்த நான்காவது நிமிடத்தில், லிவர்பூலின் ஜேம்ஸ் மில்னர் உதைந்த மூலையுதையை, டெஜன் லொவ்ரேன் தலையால் முட்ட, கோல் கம்பத்துக்கருகிலிருந்த சாடியோ மனே அதைக் கோலாக்கி கோலெண்ணிக்கையை சமப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, இஸ்கோவின் உதையொன்றை லொரிஸ் கரியுஸ் தடுத்தபோதும் அவருக்குப் பதிலாக மாற்று வீரராகக் களமிறங்கிய கரித் பேல், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் அபாரமான தலைக்கு மேலான உதையொன்றின் மூலமாக கோலைப் பெற றியல் மட்ரிட் மீண்டும் முன்னிலை பெற்றது.

இதன்பின்னர், சாடியோ மனேயின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிச்சயமான கோலொன்றை அபாரமான இடைமறிப்பு மூலம் லிவர்பூலின் பின்கள வீரர் அன்றூ றொபெர்ட்ஸன் தடுத்திருந்தார்.

தொடர்ந்த ஆட்டத்தில், கரிம் பென்ஸீமாவின் உதையொன்றை லொரிஸ் கரியுஸ் தடுத்திருந்தபோதும் போட்டியின் 83ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்திலிருந்து கரித் பேல் உதையொன்றை தனது கைகளுக்குள்ளால் கோல் கம்பத்துக்குள் தவறவிட 3-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் வென்ற றியல் மட்ரிட், அதிகூடிய தடவைகளாக 13ஆவது தடவையாக சம்பியன்ஸ் லீக்கில் சம்பியனாகிக் கொண்டது.

இதில், றியல் மட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இம்முறையோடு அதிகூடிய தடவைகளாக ஐந்தாவது தடவை சம்பியன்ஸ் லீக்கை வென்றதோடு, றியல் மட்ரிட்டின் முகாமையாளர் ஸினடி ஸிடன் மூன்றாவது தடவையாக சம்பியன்ஸ் லீக்கை வென்று, அதிகூடிய தடவைகள் சம்பியன்ஸ் லீக்கை வென்ற முகாமையாளராக தனது பெயரைப் பதிந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .