2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கலக்கினார் திஸர; வென்றது இலங்கை

Editorial   / 2018 ஜனவரி 21 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நேற்று (21) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டது.

டாக்காவில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

முதலாவது விக்கெட்டுக்காக 44 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்த சிம்பாப்வே அணி, 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5ஆவது விக்கெட்டுக்காக 66 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுகள் இழக்கப்பட, 44 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் அவ்வணி பெற்றது.

துடுப்பாட்டத்தில் பிரென்டன் டெய்லர் 58 (80), கிறேம் கிறீமர் 34 (42) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மிகச்சிறப்பாகச் செயற்பட்ட திஸர பெரேரா, 8 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நுவான் பிரதீப், 8 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, லக்‌ஷான் சந்தகான், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

199 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 33 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டை இழந்த போதிலும், இரண்டாவது விக்கெட்டுக்காக, 70 ஓட்டங்கள் பகிரப்பட்டன.

அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழக்கப்பட்டு, 4 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களுடனும், 5 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களுடனும் இலங்கை காணப்பட்டாலும், 6ஆவது விக்கெட்டுக்காக, பதில் தலைவர் டினேஷ் சந்திமாலும் சகலதுறை வீரர் திஸர பெரேராவும் பிரிக்கப்படாத 57 ஓட்டங்களைப் பகிர்ந்து, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

இதன்படி, 44.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, வெற்றியிலக்கை இலங்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா 49 (57), திஸர பெரேரா ஆட்டமிழக்காமல் 39 (26), டினேஷ் சந்திமால் 38 (71), குசல் மென்டிஸ் 36 (44) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பிளெஸிங் முஸரபானி, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சகலதுறைகளிலும் பிரகாசித்த திஸர பெரேரா, போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த இலங்கை, இப்போட்டியில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தொடரிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்தைத் தவிர்த்துக் கொண்டது. இதன்படி, அடுத்ததாக பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றாலோ அல்லது சிம்பாப்வேயை விட வித்தியாசம் குறைவான வகையில் தோல்வியடைந்தாலோ, இறுதிப் போட்டியில், பங்களாதேஷை, இலங்கை எதிர்கொள்ளும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .