2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காயங்களால் அவதியுறும் இலங்கை வீரர்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளில் அவ்வணியுடன் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில், இலங்கையின் முன்னணி வீரர்கள் காயங்களால் அவதியுறுவது தொடர்கிறது.

குறித்த தொடருக்கான குழாமில் இடம்பெறக்கூடியவர்களெனக் கருதப்படும் ஏழு வீரர்கள், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுப்பர் மாகாணத் தொடரின் போட்டிகளை காயங்கள் காரணமாகத் தவறவிட்டுள்ளனர்.

மூன்று போட்டிகளை ஒவ்வொரு அணியும் கொண்டிருக்கும் இத்தொடரில், கண்டி அணியின் தலைவரான அஞ்சலோ மத்தியூஸும் காலி அணியின் தலைவரான சுரங்க லக்மாலும் ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.

இலங்கை, இந்திய, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கு முன்னரேற்பட்ட கெண்டைக்கால் பின்தசை காயத்திலிருந்து அஞ்சலோ மத்தியூஸ் குணமடைந்து வருவதோடு, தோட்பட்டைக்கும் இடுப்புக் பகுதிக்குமிடையிலான பகுதியிலேற்பட்ட உபாதை காரணமாக வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் இத்தொடரின் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, குறித்த இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கையின் இறுதி குழுநிலை போட்டியிலேற்பட்ட பின்தொடைத் தசைநார் உபாதையிலிருந்து குணமடைவதற்கு ஐந்து வாரங்கள் தேவையென்ற நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் நுவான் பிரதீப் இடம்பெறமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

நுவான் பிரதீப் தவிர, பங்களாதேஷில் இடம்பெற்ற அவ்வணியுடனான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் பின்தொடைத் தசைநார் உபாதைக்குள்ளாகிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷெகான் மதுஷங்கவும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தில் இடம்பெறும் சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுப்பர் மாகாணத் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடி 11 ஓவர்களை வீசியமைத் தொடர்ந்து, தோட்படைக்குக்கும் இடுப்புப் பகுதிக்குமிடைப்பட்ட பகுதியில் உபாதையொன்றை ஏற்படுத்திக் கொண்ட இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவும் மூன்று வாரங்களின் பின்னரே பந்துவீச முடியும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் இவரும் இடம்பெறுவது சந்தேகமானதாகவே காணப்படுகிறது. இதுதவிர, இந்தியன் பிறீமியர் லீக்கின் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில்,, ஆகக்குறைந்தது இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக்கின் முதல் மூன்று வாரங்களுக்காவது இவர் விளையாட மாட்டார் எனத் தெரிகின்றது.

இதேவேளை, பங்களாதேஷில் இடம்பெற்ற அவ்வணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான களத்தடுப்பு பயிற்சியில், வலது கையில் காயமடைந்த சகலதுறை வீரர் அசேல குணரட்ணவும் குறித்த காயத்திலிருந்து குணமடைய குறைந்தது மூன்று வாரங்களைக் கேட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, துடுப்பாட்ட வீரர் குசல் பெரேராவும் பின்தொடைத் தசைநார் உபாதையால் அவதிப்படுகின்ற நிலையில், இடம்பெற்றுவரும் சுப்பர் மாகாணத் தொடரின் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், அடுத்த வாரம் இடம்பெறவுள்ள சுப்பர் மாகாணத் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் அஞ்சலோ மத்தியூஸ், சுரங்க லக்மால், குசல் பெரேரா ஆகியோர் விளையாடுவோர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .