2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கும்ப்ளேயை ஷாஸ்திரியால் பிரதியிடுவதற்கு விதிகள் மீறப்பட்டன’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அனில் கும்ப்ளேயை தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரியால் பிரதியிடும்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விதிகளை மீறியதாக இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் செயற்குழுவின் உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி ராகுல் ஜொஹ்ரிக்கு தொடர்ச்சியாக கும்ப்ளே பற்றி இந்திய அணித்தலைவர் விராத் கோலி தகவல்களை அனுப்பியதாகவும் இதன் காரணமாகவே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து கும்ப்ளே இராஜினாமா செய்ததாக எடுல்ஜி தெரிவித்துள்ளார்.

கும்ப்ளேயின் பயிற்சிப் பாணி குறித்தும் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தொடருவது குறித்தும் கோலி விமர்சனங்களைக் கொண்டிருக்கிறார் என அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கூறியதைத் தொடர்ந்து, ஓராண்டிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கடந்தாண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரைக்குமாக ஓராண்டைக் கொண்டே கும்ப்ளேயின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஒப்பந்தம் காணப்பட்டிருந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக இங்கிலாந்தை இந்தியா வந்தடைந்தபோதே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளம்பரப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால நேரடியாக விண்ணப்பதாரியாக தெரிவுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட கும்ப்ளே உட்பட ஆறு விண்ணபதாரிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணபித்திருந்தனர்.

அந்தவகையில், பயிற்சியாளரை தெரிவுசெய்யும் பணி சச்சின் டென்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஸ்மன் ஆகியோரை உள்ளடக்கிய கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நிர்வாகிகள் செயற்குழுவின் பேரில் கோலியைச் சந்தித்த குறித்த செயற்குழு கும்ப்ளேக்கும் கோலிக்குமிடையிலான வேறுபாடுகளை களைய முயன்று தோற்றிருந்தது.

இந்நிலையில், தமது முதன்மைத் தெரிவாக கும்ப்ளேயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு இச்செயற்குழு அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் பயிற்சியாளருக்கு விண்ணபிப்பதற்கான திகதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நீடித்திருந்த நிலையில் ரவி ஷாஸ்திரி விண்ணப்பிக்கப்பட்டு, அடுத்தாண்டு உலகக் கிண்ணம் வரைக்கும் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இறுதி செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே இந்த தெரிவு முறை முழுவதும் மோசடியானதென எடுல்ஜி தெரிவித்துள்ளார். இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரை தெரிவுசெய்வதற்கான குழுவை நியமிப்பதில் தனது செயற்குழுத் தலைவர் வினோத் ராயுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே இவ்வுண்மையை எடுல்ஜி வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பெண்கள் அணியின் சிரேஷ்ட வீராங்கனைகளான, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளர், உபதலைவி ஸ்மருதி மந்தனா ஆகியோர் தற்காலிகப் பயிற்றுவிப்பாளராகவிருந்த ரமேஷ் பவார் அப்பதவியில் தொடர வேண்டுமென நிர்வாகிகள் செயற்குழுவையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையையும் கோரியுள்ள நிலையில், பயிற்சியாளர்களை வீரர்கள் தெரிவுசெய்ய முடியாதென வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்திலேயே, கும்ப்ளே பதவிவிலகியமையில் கோலியின் வகிபாகத்தை சுட்டிக் காட்டிய எடுல்ஜி, ஏன் ஹர்மன்பிறீட் கெளரும் ஸ்மிருதி மந்தனாவும் தாங்கள் அணியின் நன்மைக்காக தாங்கள் உணருவதை செய்யக்கூடாதென வினோத் ராய்க்கு அனுப்பிய மின்னஞ்சலில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்று முடிந்த பெண்களுக்கான உலக இருபதுக்கு – 20 தொடரின் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் சிரேஷ்ட வீராங்கனையும் ஒருநள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவி மிதாலி ராஜ் சேர்த்துக் கொள்ளப்படாதைத் தொடர்ந்து மிதாலி ராஜ்ஜும் ரமேஷ் பவாரும் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிய நிகழ்வுகளைத் தொடர்ந்தே புதிய பயிற்றுவிப்பாளருக்கன அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

புதிய பயிற்சியாளரை சச்சின் தென்டுல்கர், செளரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஸ்மன் ஆகியோரே தெரிவுசெய்ய வேண்டுமென எடுல்ஜி விரும்புகையில், அவர்கள் உடனடியாக தமக்கு நேரமில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்காலிகப் பயிற்றுவிப்பாளராக ரமேஷ் பவாரைத் தொடருமாறு எடுல்ஜி கோருகின்ற நிலையில், பயிற்சியாளரை நியமிப்பதற்காக கபில் தேவ், ஷாந்தா ரங்கசுவாமி, அனுஷ்ம கயேக்வாட் ஆகியோரை வினோத் ராய் நியமித்துள்ளமையே வினோத் ராய்க்கும் எடுல்ஜிக்குமிடையே பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, ஹேர்ஷல் கிப்ஸ், ஓவைஸ் ஷா, மனோஜ் பிரபாகர் ஆகியோரும் தற்போது ரமேஷ் பவாரும் பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .