2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோப்பா அமெரிக்கா தொடர்: ஆர்ஜென்டீனா – பராகுவே போட்டி சமநிலை

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரில், பெலோ ஹொறிஸோன்டேயில் இன்று காலை இடம்பெற்ற பராகுவேயுடனான குழு பி போட்டியொன்றை சமநிலையில் ஆர்ஜென்டீனா முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் 37ஆவது நிமிடத்தில், சக முன்களவீரரான மிக்கேல் அல்மிரோன் வழங்கிய பந்தைக் கோலாக்கிய பராகுவேயின் மத்தியகளவீரரான றிக்கார்டோ சந்தேஸ் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

முதற்பாதி முடிவு வரைக்கும் வேறெந்த கோலெதுவும் பெறப்படாத நிலையில் முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவே முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது பாதியில் ஆர்ஜென்டீனாவின் முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில், போட்டியின் 51ஆவது நிமிடத்தில் சேர்ஜியோ அகுரோ வழங்கிய பந்தை ஆர்ஜென்டீனாவின் முன்களவீரரான லோட்டாரோ மார்ட்டின்ஸ் கோல் கம்பத்தை நோக்கி உதைய அது கோல் கம்பத்தில் பட்டு ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர முன்களவீரரான லியனல் மெஸ்ஸியிடம் வந்தது. அவர் அதை கோல் கம்பத்தை நோக்கி உதைந்தபோதும் அதை பராகுவேயின் கோல் காப்பாளர் றொபேர்ட்டோ ஃபெர்ணான்டஸ் களத்துக்கு வெளியில் தட்டி விட்டிருந்தார்.

அந்தவகையில், மூலையுதையை உதைவதற்கு லியனல் மெஸ்ஸி தயாராகிக் கொண்டிருந்தபோது, காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பை ஆராய்ந்த மத்தியஸ்தர், லோட்டாரோ மார்ட்டின்ஸின் கோல் கம்பத்தில் பட்ட உதையானது அதன் முன்னர் பராகுவேயின் இவான் பெரிஸின் கையில் பட்டது எனத் தெரிவித்து பெனால்டி வழங்க, அதைக் கோலாக்கிய லியனல் மெஸ்ஸி கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இந்நிலையில், 62ஆவது நிமிடத்தில் பராகுவேயின் மத்தியகள வீரர் டெர்லிஸ் கொன்ஸலேஸ், ஆர்ஜென்டீனாவின் பெனால்டி பகுதிக்குள் வைத்து அவ்வணியின் பின்களவீரர் நிக்கலஸ் ஒட்டமென்டியால் வீழ்த்தப்பட்ட வழங்கப்பட்ட பெனால்டியை டெர்லிஸ் கொன்ஸலேஸ் உதைய, அதை ஆர்ஜென்டீனாவின் கோல் காப்பாளர் ஃபிராங்கோ அர்மனி தடுக்க போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

முன்னதாக, முதற்பாதியின் முடிவினில் கோல் கம்பத்தை நோக்கி வந்த டெர்லிஸ் கொன்ஸலேஸை முன்னேறிச் சென்று வீழ்த்தியிருந்த ஃபிராங்கோ அர்மனி, அதிர்ஷ்டவசமாக மஞ்சள் அட்டையுடன் மாத்திரம் தப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .