2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கோப்பா அமெரிக்கா தொடர்: பெருவைத் தோற்கடித்தது பிரேஸில்

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்நாட்டில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரில், சா போலோவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற பெருவுடனான குழு ஏ போட்டியொன்றில் அவ்வணியை பிரேஸில் தோற்கடித்தது.

இப்போட்டியின் 12ஆவது நிமிடத்தில், சக முன்களவீரரான பிலிப் கோச்சினியோவின் மூலையுதையைத் தொடர்ந்து பெருவின் கோல் கம்ப பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையையைப் பயன்படுத்தி கோலைப் பெற்ற பிரேஸிலின் மத்தியகளவீரரான கஸேமீரோ தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்த ஏழாவது நிமிடத்தில் பெருவின் கோல் காப்பாளர் பெட்ரோ கல்லெஸ்ஸேயின் உதையை பிரேஸிலின் முன்களவீரரான றொபேர்ட்டோ ஃபெர்மினோ தடுத்த நிலையில் அது கோல் கம்பத்தில் பட்டு மீண்டும் திரும்பி வந்த நிலையில், பெட்ரோ கல்லெஸ்ஸேயைத் தாண்டி றொபேர்ட்டோ ஃபெர்மினோ கோலாக்க தமது முன்னிலையை பிரேஸில் இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இதைத் தொடர்ந்து போட்டியின் 32ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்திலிருந்து நீண்ட தூரத்திலிருந்து தமது முன்களவீரர் எவெர்ற்றன் அபாரமாகப் பெற்ற கோலோடு முதற்பாதி முன்னிலையில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் முன்னிலை வகித்தது.

பின்னர் இரண்டாவது பாதியின் 53ஆவது நிமிடத்தில் தமதணித்தலைவரும் பின்களவீரருமான டனி அல்வேஸ் பெற்ற கோலுடன் 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பிரேஸில், 90ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய முன்களவீரர் வில்லியன் பெற்ற கோலோடு இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்நிலையில், போட்டியில் இறுதி நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பொன்று பிரேஸிலுக்கு கிடைத்திருந்த நிலையில், பிரேஸிலின் முன்களவீரர் கப்ரியல் ஜெஸூஸின் குறித்த பெனால்டியை பெட்ரோ கல்லெஸ்ஸே தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .