2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோலிக்கும் பும்ராவுக்கும் உச்சம்

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவது போட்டியிலும் வெற்றிபெற்று, 5-0 என இலங்கைக்கு வெள்ளையடித்த இந்திய அணிக்கு, வீரர்களின் தரவரிசையிலும் ஏராளமான முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன.

நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய இந்திய அணி, விராத் கோலியின் அற்புதமான சதத்தின் உதவியுடன், 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.

இதன் மூலம், இலங்கை மண்ணில் வைத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதன்முறையாக இலங்கை வெள்ளையடிக்கப்பட்ட சந்தர்ப்பமாக இது அமைந்தது.

இந்தப் போட்டியில் மட்டுமல்லாது, தொடரிலும் பிரகாசித்த இந்திய அணித் தலைவர் விராத் கோலி, துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், தனது முதலிடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். அவர், தரப்படுத்தல் புள்ளிகளாக 887 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இது, அவரது கிரிக்கெட் வாழ்வில் அவர் பெற்ற உச்சபட்சப் புள்ளிகளாகும்.

முதல் 8 இடங்களில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 9ஆவது இடத்தில் றோகித் ஷர்மாவும் (14இலிருந்து), 10ஆவது இடத்தில் மகேந்திரசிங் டோணியும் (12இலிருந்து) முன்னேறினர்.

இலங்கை அணியைப் பொதுத்தவரை, முதல் 20 இடங்களுக்குள் எந்த வீரரும் காணப்படவில்லை. தொடரின் ஆரம்பத்தில் 27ஆவது இடத்தில் காணப்பட்ட முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 23ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில், 33ஆவது இடத்திலுள்ள குசல் மென்டிஸும், 36ஆவது இடத்திலுள்ள நிரோஷன் டிக்வெல்லவும் காணப்படுகின்றனர்.

முதல் 10 துடுப்பாட்ட வீரர்கள்:

விராத் கோலி, டேவிட் வோணர், ஏபி டி வில்லியர்ஸ், ஜோ றூட், பாபர் அஸாம், கேன் வில்லியம்ஸன், குயின்டன் டி கொக், ஃபப் டு பிளெஸி, றோகித் ஷர்மா, மகேந்திரசிங் டோணி.

பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில், முதல் 3 இடங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற போதிலும், 4ஆவது இடத்தில் இந்தியாவின் ஜஸ்பிறிட் பும்ரா காணப்படுகிறார். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இவர், 31ஆவது இடத்தில் காணப்பட்டிருந்தார்.

அடுத்த முக்கிய மாற்றமாக, சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேல் காணப்படுகிறார். தொடரின் ஆரம்பத்தில் 20ஆவது இடத்தில் காணப்பட்ட அவர், 10ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை, முதல் 40 இடங்களுக்குள் எவரும் இல்லை. 42ஆவது இடத்தில், சுரங்க லக்மால் காணப்படுகிறார். அவரின் பின்னர் அஞ்சலோ மத்தியூஸ், 52ஆவது இடத்தில் காணப்படுகிறார். தொடரை 100ஆவது இடத்தில் ஆரம்பித்த அகில தனஞ்சய, தற்போது 80ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

முதல் 10 வீரர்கள்:

ஜொஷ் ஹேஸல்வூட், இம்ரான் தாஹிர், மிற்சல் ஸ்டார்க், ஜஸ்பிறிட் பும்ரா, கஜிஸ்கோ றபடா, ட்ரென்ட் போல்ட், ஹஸன் அலி, சுனில் நரைன், றஷீட் கான், அக்ஸர் பட்டேல்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X