2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சந்திமாலுக்கு ஒரு டெஸ்ட் தடை

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையே கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்து நேற்று முன்தினம் முடிவடைந்த இரண்டாவது டெஸ்டில் பந்தின் தன்மையை மாற்ற முனைந்த குற்றச்சாட்டில், இலங்கையணியின் தலைவர் தினேஷ் சந்திமால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தன்மீதான குறித்த குற்றச்சாட்டை தினேஷ் சந்திமால் மறுத்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த பின்னர், போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஶ்ரீநாத், அணி முகாமைத்துவம், ஏனைய போட்டி அதிகாரிகளுடன் விசாரணையொன்றில் பங்கேற்றார்.

குறித்த விசாரணையில், தனது வாயில் ஏதோ இட்டதை ஏற்றுக் கொண்ட தினேஷ் சந்திமால், ஆனால், அது என்ன என ஞாபகமில்லை என்று கூறியதாக சர்வதேச கிரிக்கெட் சபை கூறியுள்ளது. அந்தவகையிலேயே, இருக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையாக, இரண்டு இடைநிறுத்த புள்ளிகளும் அவரது போட்டி ஊதியத்தின் 100 சதவீத அபராதமும் வழங்கப்பட்டிருந்தது. இரண்டு இடைநிறுத்தப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் தடைக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஏறத்தாழ இதே வகையாக பந்தைச் சேதப்படுத்த முயன்றமைக்காக தென்னாபிரிக்க அணியின் தலைவர் பப் டு பிளெஸிக்கு போட்டி ஊதியத்தின் 100 சதவீத அபராதம் மாத்திரமே விதிக்கப்பட்டிருந்த நிலையில், தென்னாபிரிக்காவுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி பந்தைச் சேதப்படுத்த முயன்ற பின்னர், பந்தைச் சேதப்படுத்த முயலுவதை சர்வதேச கிரிக்கெட் சபை கடுமையாக எடுப்பதை தினேஷ் சந்திமாலின் தடை காண்பிக்கின்றது.

இதேவேளை, இதற்கு மேலதிகமாக இரண்டாவது டெஸ்டின் மூன்றாம் நாளை காலையில் ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்களாக இலங்கையணி களமிறங்க மறுத்த நிலையில், தினேஷ் சந்திமாலும் இலங்கையணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்கவும் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்கவும் நடத்தைக் கோவையை மீறினார்கள் என்ற நிலையில், இவர்கள் இரண்டு தொடக்கம் நான்கு வரையான டெஸ்ட் போட்டித் தடைகளை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

அந்தவகையில், குறித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் போட்டித் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் தினேஷ் சந்திமால், அசங்க குருசிங்க, சந்திக ஹத்துருசிங்க தவறவிடும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவர்களுக்கெதிராக மூன்றாம் நிலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதற்காக நான்கு தொடக்கம் எட்டு இடைநிறுத்தப் புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .