2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சபையையும் தேர்வாளர்களையும் விமர்சிக்கிறார் இலங்கைப் பயிற்றுநர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி, அண்மைக்காலமாகவே தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அதன் நிலைமை குறித்து, அணியின் இடைக்காலப் பயிற்றுநர் நிக் போதாஸ், இலங்கை கிரிக்கெட் சபை, அணியின் தேர்வாளர்கள் ஆகியோர் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இவ்வாண்டில், தென்னாபிரிக்காவில் வைத்து தென்னாபிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்த இலங்கை அணி, அதன் பின்னர் பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கெதிராகவும் குறிப்பிடும் படியான தோல்விகளைப் பெற்றுக் கொண்டது. பின்னர், இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த அவ்வணி, தற்போது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், அண்மையகாலத் தோல்விகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதாஸ், "உங்களுக்குக் கோபம் வரும் தான். ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் என்பது, அநேகமாகப் பொருத்தமானது தான்" என, அதிக தலையீடு காணப்படுகிறது என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

"உங்களுக்கு எரிச்சல் வரும் தான். வீரர்களுடன் எனக்குக் கோபம் இருக்கிறதா? இல்லவே இல்லை. எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்குக் கடினமாக அவர்கள் உழைக்கின்றனர். உதவும் பயிற்றுநர்கள், மிகச்சிறப்பாக உள்ளனர். திட்டமிடுதலுக்கும் வீரர்களுக்கு உதவுவதிலும், அவர்கள் அளவுகணக்கின்றிச் செயற்படுகின்றனர். அணி அறைக்குள் இருப்பவர்கள் யாரிலும் நீங்கள் குறைகாண முடியாது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "இவர்கள், அற்புதமான திறமை படைத்த வீரர்கள். அவர்களுக்கு நீங்கள் சிறிதளவு நேரம் வழங்கி, சிறிதளவு அன்பு வழங்கி, சிறிதளவு பரிவு வழங்கி, அந்த நம்பிக்கையை வளர்த்தால், முடிவுகளை நீங்கள் பெற முடியும்" என்று குறிப்பிட்டார்.

கடந்தாண்டு மே மாதத்திலிருந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இலங்கை அணி சார்பாக 40 வீரர்கள் விளையாடியுள்ளனர். இது, வீரர்கள் அடிக்கடி மாற்றப்படுவதைக் காட்டுகிறது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொதாஸ், "அணி வீரர்கள் தெரிவில் தொடர்ச்சியான தன்மையை நீங்கள் பெற்றால், பெறுபேறுகளில் முன்னேற்றத்தைக் காண முடியும். ஒவ்வொரு போட்டியிலும், புதிய வீரர்களை நாங்கள் பெறும் போது, நம்பிக்கை என்ற விடயத்தில், அது கடினமாகப் போய்விடுகிறது. வீரர்களின் விடயத்தில், அது கடினமானது. பயிற்றுநர்கள் விடயத்திலும், அது கடினமானது" என்று தெரிவித்தார்.

இலங்கை அணியின் பயிற்றுநராக இருந்த கிரஹம் ஃபோர்ட், அணி முகாமைத்துவத்துடன் முரண்பட்டு, அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். அவரின் பின்னரேயே, நிக் போதாஸ் நியமிக்கப்பட்டார்.

தனக்குக் காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக, வெளிப்படையாக ஃபோர்ட் கதைக்கவில்லை என்றாலும் கூட, நிக் போதாஸ், அவ்விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .