2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமநிலையில் சிற்றி - எவேர்ட்டன் போட்டி; றூணிக்கு 200ஆவது கோல்

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில், மன்செஸ்டர் சிற்றி, எவேர்ட்டன் அணிகளுக்கிடையிலான போட்டி, சமநிலையில் முடிவடைந்தது. ஆனால், தனிப்பட்ட ரீதியில், எவேர்ட்டனின் வெய்ன் றூணிக்கு, முக்கியமான போட்டியாக இது அமைந்தது.

இந்தப் போட்டியின் 35ஆவது நிமிடத்தில், டொமினிக் கல்வேர்ட்-லெவின் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பயன்படுத்திய றூணி, சிற்றி அணியின் கோல் காப்பாளர் எடெர்ஸனின் கால்களுக்குள்ளால் பந்தை அடித்துக் கோலாக்கினார்.

இதைத் தொடர்ந்து முன்னிலை பெற்ற எவேர்ட்டனுக்கு, இன்னொரு முன்னிலையும் கிடைத்தது. சிற்றி அணியின் கைல் வோக்கர், 42ஆவது நிமிடத்திலும் பின்னர் 2 நிமிடங்களின் பின்னரும், மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். எனவே, 10 பேர் கொண்ட அணியாக, சிற்றி மாறியது.

இரண்டாவது பாதி முழுவதிலும், 10 பேருடன் காணப்பட்ட அவ்வணி, போராடும் திறனை விட்டுக் கொடுக்காமல் விளையாடியது. அந்த முயற்சியின் விளைவாக, போட்டியின் 82ஆவது நிமிடத்தில், சிற்றியின் றஹீம் ஸ்டேர்லிங், கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார். எவேர்ட்டனின் மேஸன் ஹோல்கேட், தலையால் பந்தை முட்டிய போது, பந்தைப் பறித்த ஸ்டேர்லிங், இந்தக் கோலைப் பெற்றார்.

பின்னர், போட்டியின் 88ஆவது நிமிடத்தில், எவேர்ட்டன் அணியும் 10 பேர் கொண்ட அணியாக மாறியது. மத்தியகள வீரர் மோர்கன் ஷ்னெய்டேர்லின், 2ஆவது மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு, களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், 2 அணிகளுமே, 10 பேருடன் போட்டியை நிறைவுசெய்தன.

இந்தப் போட்டியில் வெய்ன் றூணி பெற்ற கோல், இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், அவர் பெற்றுக் கொண்ட 200ஆவது கோலாகும். இதன்மூலம், பிறீமியர் லீக்கில், 200ஆவது கோலைப் பெற்ற 2ஆவது நபர் என்ற பெருமையை, றூணி பெற்றார்.

பிறீமியர் லீக்கில் அதிகமான கோல்களை, பிளக்பேர்ண் றோவர்ஸ், நியூகாசில் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்காக விளையாடிய அலன் ஷீரெரர் பெற்றுள்ளார். அவர், 260 கோல்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X