2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமநிலையில் பார்சிலோனா – நாப்போலி போட்டி

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியை ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா சமநிலையில் முடித்துக் கொண்டது.

இப்போட்டி ஆரம்பித்ததிலிருந்து பார்சிலோனா பந்தைக் கட்டுப்படுத்தியபோதும், கோலைப் பெற முடிந்திருக்கவில்லை. இந்நிலையில், நாப்போலியின் மத்தியகளவீரர் பியோத்தர் ஸிலென்ஸ்கியிடம் பார்சிலோனாவின் பின்களவீரர் ஜூனியர் பிர்போ பந்தை இழந்த நிலையில், அவர் அதை தனது சக முன்களவீரர் ட்ரைஸ் மேர்ட்டன்ஸிடம் வழங்க போட்டியின் 30ஆவது நிமிடத்தில் அவர் அதைக் கோலாக்க நாப்போலி முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், பார்சிலோனாவின் மத்தியகளவீரர் சேர்ஜியோ புஷ்கட்ஸால் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் வீழ்த்தப்பட்ட நிலையில் காயம் காரணமாக ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் களத்தை விட்டு வெளியேறியிருந்தார். இந்நிலையில் மஞ்சள் அட்டை காட்டப்பெற்ற சேர்ஜியோ புஷ்கட்ஸ், அடுத்த மாதம் 19ஆம் திகதி தமது மைதானத்தில் நடைபெறவுள்ள நாப்போலியுடனான இரண்டாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியை முன்னரும் மஞ்சள் அட்டையை சம்பியன்ஸ் லீக்கில் பெற்றிருந்தமை காரணமாக தவறவிடுகின்றார்.

இதேவேளை, சக பின்களவீரர் நெல்சன் செமினோடவிடமிருந்து வந்த பந்தை போட்டியின் 57ஆவது நிமிடத்தில் கோலாக்கிய பார்சிலோனாவின் முன்களவீரர் அன்டோனி கிறீஸ்மன், கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், நாப்போலியின் மத்தியகளவீரர்களான அணித்தலைவர் லொரென்ஸோ இன்சீனியா, ஜொஸே கல்லகோனிடமிருந்தான கோல் கம்பத்தை நோக்கிய உதைகளை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் அபாரமாகத் தடுத்திருந்தார்.

இதேவேளை, நாப்போலியின் பின்களவீரர் மரியோ ருய்யை வீழ்த்தியமைக்காக மஞ்சள் அட்டை காட்டப்பெற்ற பார்சிலோனாவின் முன்களவீரரான அர்துரோ விடால், அவரை தலையால் முட்டியமை காரணமாக மீண்டும் மஞ்சள் அட்டை பெற்று, சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் பார்சிலோனாவின் பின்களவீரர் ஜெராட் பிகேயும் காயம் காரணமாக களத்திலிருந்து வெளியேறிய நிலையில் இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா போட்டியை சமநிலையில் முடித்திருந்தது.

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றிருந்தது. பயேர்ண் மியூனிச் சார்பாக, சேர்ஜி நர்பி இரண்டு கோல்களையும், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஒரு கோலையும் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .