2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், பரிஸ் ஸா ஜெர்மைன் அணி சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

லீக் 1 தொடரின் நடப்புச் சம்பியன்களான மொனாக்கோ அணியை தமது மைதானத்தில் நேற்றுவென்றமையைத் தொடர்ந்தே நடப்பு லீக் 1 தொடரின் சம்பியனாக பரிஸ் ஸா ஜெர்மைன் மாறியிருந்தது.

இப்போட்டியின் 14ஆவது நிமிடத்தில், பரிஸ் ஸா ஜெர்மைனின் டனி அல்விஸ் கொடுத்த பந்தை அவரது சக வீரர் ஜியோவனி லொ செல்ஸோ கோலாக்க பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில், பரிஸ் ஸா ஜெர்மைனின் ஜீலியன் ட்ரெக்ஸ்லர் கொடுத்த பந்தை, அவரது சக வீரர் எடின்சன் கவானி தலையால் முட்டி கோலாக்க தமது முன்னிலையை பரிஸ் ஸா ஜெர்மைன் இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இதற்கடுத்த மூன்றாவது நிமிடத்தில், எடின்சன் கவானி, தனது சக வீரர் அஞ்சல் டி மரியாவிடம் கொடுக்க, அவர் அதை கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைன், இதற்கடுத்த ஏழாவது நிமிடத்தில் ஸ்கெவியர் பஸ்டோரே கொடுத்த பந்தை ஜியோவனி லொ செல்ஸோ கோலாக்க 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்த ஆட்டத்தில், போட்டியின் 38ஆவது நிமிடத்தில் மொனாக்கோவின் றொனி லொபேஸ் பெற்ற கோல் காரணமாக பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னிலை மூன்றாகக் குறைந்தது. எனினும் போட்டியின் 58ஆவது நிமிடத்தில் ஸ்கேவியர் பஸ்டோரே கொடுத்த பந்தை அஞ்சல் டி மரியா கோலாக்க 5-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, போட்டியின் 76ஆவது நிமிடத்தில், பரிஸ் ஸா ஜெர்மைனின் அணித்தலைவர் தியாகோ சில்வா தலையால் முட்டிய பந்து, மொனாக்கோவின் அணித்தலைவர் றடமெல் பல்காவோவில் பட்டு கோலாக 6-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பரிஸ் ஸா ஜெர்மைன், போட்டியின் 86ஆவது நிமிடத்தில் ஜூலியன் ட்ரெக்ஸ்லர் பெற்ற கோலோடு இறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

அந்தவகையில், இப்போட்டியுடன் சேர்த்து 33 போட்டிகளில் விளையாடி, லீக் 1 புள்ளிகள் பட்டியலில் 87 புள்ளிகளை பரிஸ் ஸா ஜெர்மைன் பெற்றுள்ளதுடன், புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள மொனாக்கோ 33 போட்டிகளில் 70 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்தவகையில், இரன்டு அணிகளுக்கும் இன்னும் தலா ஐந்து போட்டிகள் எஞ்சியிருக்கையில், பரிஸ் ஸா ஜெர்மைன் ஐந்து போட்டிகளில் தோற்று, மொனாக்கோ ஐந்து போட்டிகளில் வென்றாலும் 85 புள்ளிகளையே மொனாக்கோ பெற முடியுமென்ற நிலையிலேயே பரிஸ் ஸா ஜெர்மைன் லீக் 1 சம்பியனாக முடிசூடிக்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X