2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2019 மே 20 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான, கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனானது.

வெம்ப்ளியில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற வட்ஃபேர்ட்டுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில், சக முன்களவீரர் ரஹீம் ஸ்டேர்லிங் தலையால் முட்டிக் கொடுத்த பந்தைக் கோலாக்கிய மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான டேவிட் சில்வா, ஆரம்பத்தில் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர் அடுத்த 12ஆவது நிமிடத்தில் சக மத்தியகளவீரரான பெர்ணார்டோ சில்வா கொடுத்த பந்தை மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான கப்ரியல் ஜெஸூஸ் கோலாக்க தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிய மன்செஸ்டர் சிற்றி, முதற்பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரர் கெவின் டி ப்ரூனே, கப்ரியல் ஜெஸூடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 61ஆவது நிமிடத்தில் கோலாக்க 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற மன்செஸ்டர் சிற்றி, அடுத்த ஏழாவது நிமிடத்தில் கெவின் டி ப்ரூனே கொடுத்த பந்தை கப்ரியல் ஜெஸூஸ் கோலாக்க 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து போட்டியின் 81ஆவது நிமிடத்தில், பெர்ணார்டோ சில்வா கொடுத்த பந்தை ரஹீம் ஸ்டேர்லிங் கோலாக்க 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற மன்செஸ்டர் சிற்றி, அடுத்த ஏழாவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டேர்லிங் பெற்ற மேலுமொரு கோலுடன் இறுதியில் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்நிலையில், குறித்த போட்டியைத் தொடர்ந்து மன்செஸ்டர் சிற்றியை விட்டு விலகுவதாக, அவ்வணியின் தலைவர் வின்சென்ட் கொம்பனி தெரிவித்துள்ளார்.

மத்தியகளவீரராக 2008ஆம் ஆண்டு மன்செஸ்டர் சிற்றியில் இணைந்த வின்சென்ட் கொம்பனி, 2011ஆம் ஆண்டு மன்செஸ்டர் சிற்றியின் அணித்தலைவராக பெயரிடப்பட்டிருந்தார். 33 வயதான பின்களவீரராக தற்போதிருக்கும் வின்சென்ட் கொம்பனி, நான்கு தடவைகள் பிறீமியர் லீக் பட்டங்கள், இரண்டு தடவைகள் கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணப் பட்டங்கள், நான்கு தடவைகள் கால்பந்தாட்ட லீக் கிண்ணப் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். 360 போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றிக்காக விளையாடி 20 கோல்களையும் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .