2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பியனானது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில் தமது சம்பியன் பட்டத்தை மன்செஸ்டர் சிற்றி தக்க வைத்துக் கொண்டது.

வெம்ப்ளியில் நேற்று  நடைபெற்ற இறுதிப் போட்டியில் அஸ்டன் வில்லாவை வென்றே மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் 10ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரரான சேர்ஜியோ அகுரோவால் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டப்பட்ட பந்தானது கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்தது.

எவ்வாறெனினும், சக மத்தியகளவீரர் றொட்றியால் வழங்கப்பட்ட பந்தை மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் பில் பொடென் சேர்ஜியோ அகுரோவிடம் வழங்க அவர் அதை போட்டியின் 20ஆவது நிமிடத்தில் கோலாக்கி மன்செஸ்டர் சிற்றிக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் சக மத்தியகளவீரர் இல்கி குன்டோகனின் மூலையுதையை தலையால் முட்டிக் கோலாக்கிய றொட்றி மன்செஸ்டர் சிற்றியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இந்நிலையில், மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரர் ஜோன் ஸ்டோன்ஸின் தவறைப் பயன்படுத்தி சக முன்களவீரர் அன்வர் எல் கஸியால் வழங்கப்பட்ட பந்தை அஸ்டன் வில்லாவின் இன்னொரு முன்களவீரரான முப்வானா சமட்டா போட்டியின் 41ஆவது நிமிடத்தில் கோலாக்க மன்செஸ்டர் சிற்றியின் முன்னிலையை ஒரு கோலால் அஸ்டன் வில்லா குறைத்தது.

பின்னர் பில் பொடனின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்ததுடன், றொட்றியால் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டப்பட்ட பந்தை அஸ்டன் வில்லாவின் கோல் காப்பாளர் ஒர்ஜன் நைலன்ட் தடுத்திருந்தார். தவிர, சேர்ஜியோ அகுரோவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையொன்றும் கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.

இந்நிலையில், போட்டியின் 88ஆவது நிமிடத்தில் அஸ்டன் வில்லாவின் பின்களவீரர் பியோன் இங்லிஸால் தலையால் முட்டி கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட பந்தை மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் கிளாடியோ பிராவோ தடுத்திருந்த நிலையில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .