2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானார் ஸ்ரீகாந்த்

Editorial   / 2017 ஜூன் 26 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூப்பந்தாட்டப் போட்டிகளில், முக்கியமான தொடர்களான சுப்பர்சீரிஸ் வகைத் தொடரான, அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரின் சம்பியனாக, இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடம்பி தெரிவாகியுள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும் இரண்டு முறை உலகச் சம்பியனாகத் தெரிவானவருமான சீனாவின் சென் லோங்கை வெற்றிகொண்டே, இப்பட்டத்தை அவர் வென்றார்.

இந்த இறுதிப் போட்டி, சிட்னியில் நேற்று இடம்பெற்றது.

11ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீகாந்த், 6ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள சென் லோங்கை எதிர்கொண்டார்.

முதலாவது செட்டை 22-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற ஸ்ரீகாந்த், 2ஆவது செட்டை, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்டார்.

இம்மாத ஆரம்பத்தில், இந்தோனேஷிய பகிரங்கத் தொடரில் சம்பியனாகிய ஸ்ரீகாந்த், தற்போது, ஒரே மாதத்தில் இரண்டு சுப்பர்சீரிஸ் பட்டங்களை வென்றுள்ளார்.

இதற்கு முன்னர், ஸ்ரீகாந்த்தும் சென் லோங்கும், 5 தடவைகள் மோதியுள்ள நிலையில், 6ஆவது தடவை மோதிய நேற்றைய போட்டியிலேயே, தனது முதலாவது வெற்றியை, ஸ்ரீகாந்த் பெற்றுக் கொண்டார்.

வெற்றியைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீகாந்த், “வெற்றிபெறுவதைப் பற்றியோ அல்லது தோல்வியடைவதைப் பற்றியோ நான் சிந்திக்கவில்லை. கடந்தாண்டு எனது ஓய்வுக் காலத்தின் போது, பூப்பந்தாட்டம் விளையாடுவதைத் தவறவிட்டிருந்தேன். ஆகவே, இந்தப் போட்டியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள விரும்பியிருந்தேன்.

“இங்குள்ள கள நிலைமைகள், ஆக்ரோஷமாக விளையாட வழிவகுக்காது. இவை, சிறிது மெதுவான கள நிலைமைகளாகும். ஆகவே, நீண்ட போட்டிக்காக நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இவ்வாண்டு இடம்பெற்ற சுப்பர்சீரிஸ் போட்டிகளில், இந்தியப் பகிரங்கத் தொடரில், பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் பி.வி. சிந்து, சம்பியன் பட்டம் வென்றிருந்தார். சிங்கப்பூர் பகிரங்கப் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பி. சாய் பிரநீத், சம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஸ்ரீகாந்த், இதுவரை 2 தொடர்களில் சம்பியனாகியுள்ளார்.

இதன்படி, இவ்வாண்டு இடம்பெற்ற 6 தொடர்களில், 4 தொடர்களில், இந்தியர்கள் சம்பியனாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .