2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதியில் இந்தியா

Editorial   / 2017 ஜூன் 12 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு, இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றே, இந்திய அணி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

இலண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 76 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்களுடன் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. இதில் 3 விக்கெட்டுகள், ரண் அவுட் முறையில் இழக்கப்பட்டன.

துடுப்பாட்டத்தில் குயின்டன் டீ கொக் 53 (72), ஃபப் டு பிளெஸி 36 (50), ஹஷிம் அம்லா 35 (54) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா இருவரும், தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

192 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 38 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, வெற்றிபெற்றது.

முதலாவது விக்கெட்டை 23 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி சார்பாக, 2ஆவது விக்கெட்டுக்காக ஷீகர் தவானும் விராத் கோலியும், 128 ஓட்டங்களைப் பகிர்ந்து, வெற்றியை உறுதி செய்தனர்.

துடுப்பாட்டத்தில் ஷீகர் தவான் 78 (83), விராத் கோலி ஆட்டமிழக்காமல் 76 (101) ஓட்டங்களைப் பெற்றனர்.

போட்டியின் நாயகனாக, பும்ரா தெரிவானார்.

இதன்மூலம், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இந்திய அணி, அரையிறுதியில், பெரும்பாலும் பங்களாதேஷ் அணியைச் சந்திக்கும்.

வழக்கமாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் முக்கியமான போட்டிகளில், அழுத்தம் காரணமாகத் தோல்வியடையும் அணி என்ற பெயரைக் கொண்ட தென்னாபிரிக்க அணி, நேற்றைய போட்டியிலும் தோல்வியடைந்த விதம், அதிகளவு விமர்சனங்களை முன்கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, அணித்தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் மீதான விமர்சனங்களும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .