2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து உலகச் சம்பியன்கள் வெளியே

Editorial   / 2017 ஜூன் 11 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து, உலகச் சம்பியன்களான அவுஸ்திரேலிய அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, அவ்வணி வெளியேறியது.

பேர்மிங்காமில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது விக்கெட்டுக்காக 40 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, ஒரு கட்டத்தில் அவ்வணி, 4 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது. ஆனால், அடுத்த 5 விக்கெட்டுகளும், 15 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, 9 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்கள் என்ற நிலைக்கு, அவ்வணி சென்றது. இறுதி நேரத்தில், ட்ரவிஸ் ஹெட், அதிரடியாக ஆடி, 277 ஓட்டங்கள் கிடைப்பதை உறுதிசெய்தார்.

துடுப்பாட்டத்தில் ட்ரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 71 (64), ஆரொன் ஃபின்ச் 68 (64), ஸ்டீன் ஸ்மித் 56 (77) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மார்க் வூட், அடீல் றஷீட் இருவரும் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

288 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 35 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், அணித் தலைவர் ஒய்ன் மோர்கன், சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர், அதிரடியாக விளையாடி, 4ஆவது விக்கெட்டுக்காக 159 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவ்வணி, 40.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களுடன் காணப்படும் போது, மழை குறுக்கிட்டது. அதன் பின்னர் போட்டியை நடத்த முடியாது போக, டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில், போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அப்போது, இங்கிலாந்து அணி, 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 102 (109), ஒய்ன் மோர்கன் 87 (81) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக, பென் ஸ்டோக்ஸ் தெரிவானார்.

இந்தப் போட்டியின் முடிவைத் தொடர்ந்து, இக்குழுவிலிருந்து பங்களாதேஷ் அணி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. இங்கிலாந்து அணி, ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .