2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியன்ஸ் லீக் அரையிறுதி: அஜக்ஸிடம் தோற்றது டொட்டென்ஹாம்

Editorial   / 2019 மே 02 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று (01) அதிகாலை இடம்பெற்ற நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

இப்போட்டியின் 15ஆவது நிமிடத்தில், சக மத்தியகளவீரர் ஹகிம் ஸியெச், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் பின்களவீரர்களினூடாக கொடுத்த பந்தை, கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸைத் தாண்டி அஜக்ஸின் மத்தியகளவீரரான டொனி வான் டீ பீக் கோலாக்க அஜக்ஸ் முன்னிலை பெற்றது. எவ்வாறெனினும், குறித்த கோலானது ஓஃப் சைட்டா என சந்தேகம் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் அஜக்ஸ் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், சக முன்களவீரரான டுஸன் டடிச்சிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கி அஜக்ஸின் முன்னிலையை இரட்டிப்பாக்கும் வாய்ப்பை டொனி வான் டீ பீக் கொண்டிருந்தபோதும் அவர் அதைத் தவறவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, சக பின்களவீரரான டொபி அல்டர்வெய்ட், அஜக்ஸின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானாவுடன் மோதுண்ட டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் இன்னொரு பின்களவீரரான ஜான் வெர்டொங்கன் முகத்தில் காயமடைந்ததையடுத்து மத்தியகளவீரர் மூஸா சிஸாகோவால் பிரதியிடப்பட்டிருந்தார்.

அந்தவகையில், ஏற்கெனவே காயம், தடை காரணமாக முன்களவீரர்கள் ஹரி கேன், சண் ஹெயுங் மின்னை இழந்திருந்த டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்கு இது மேலுமொரு அடியாகக் காணப்பட்டது. இந்நிலையில், சக பின்களவீரரான கெய்ரான் ட்ரிப்பியர் வழங்கிய பந்தை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான ஃபெர்ணான்டோ லொரன்டே, கோல் கம்பத்துக்கு வெளியே தலையால் செலுத்தி கோல் பெறும் வாய்ப்பை வீணடித்திருந்தார்.

இதேவேளை, முதற்பாதிக்கு சற்று முன்னர் ஃபெர்ணான்டோ லொரன்டே வழங்கிய பந்தை கோல் கம்பத்தை நோக்கி மூஸா சிஸாகோ செலுத்தியிருந்தபோதும் அது கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்த நிலையில் முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அஜக்ஸ் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மத்தியகளவீரரான டெலே அல்லியின் கோல் கம்பத்தை நோக்கியதான ஒரு உதை நேரே அன்ட்ரே ஒனானாவிடம் சென்றதுடன், மற்றையது கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்தது.

இதைத் தொடர்ந்து, டுஸன் டடிச்சுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த அஜக்ஸின் முன்களவீரரான டேவிட் நெரெஸின் உதை ஹியூகோ லோரிஸைத் தாண்டியபோதும் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பிய நிலையில், தமது முன்னிலையை இரட்டிப்பாக்க அஜக்ஸால் முடியாத நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியை வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .