2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியன்ஸ் லீக் அரையிறுதி முதலாம் சுற்று: லிவர்பூலை வீழ்த்தியது பார்சிலோனா

Editorial   / 2019 மே 03 , மு.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலை, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா வீழ்த்தியது.

இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில் சக பின்களவீரர் ஜோர்டி அல்பா, லிவர்பூலின் பின்களவீரர்களினூடாக வழங்கிய பந்தை, லிவர்பூலின் இரண்டு பின்களவீரர்களினூடாக கோலாக்கிய பார்சிலோனாவின் முன்களவீரரான லூயிஸ் சுவாரஸ், தனது முன்னாள் அணிக்கெதிராக தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

குறித்த கோலைத் தொடர்ந்தும் பெரும்பாலான நேரங்களில் லிவர்பூலே பந்தைக் கட்டுப்படுத்தியிருந்தபோதும், லூயிஸ் சுவாரஸின் கோல் கம்பத்தை நோக்கிய உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்த நிலையில் அதைக் கோலாக்கிய பார்சிலோனாவின் அணித்தலைவரும் முன்களவீரருமான லியனல் மெஸ்ஸி, தனதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கியதோடு, அடுத்த ஏழாவது நிமிடத்தில் கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலிருந்தான பிறீ கிக் மூலம் அபாரமாக கோலொன்றைப் பெற்று தனதணியின் முன்னிலையை 3-0 என்ற கோல் கணக்கில் அதிகரித்தார்.

இதேவேளை, மாற்றுவீரராகக் களமிறங்கிய லிவர்பூலின் முன்களவீரரான றொபேர்ட்டோ ஃபெர்மினோவின் உதையானது கோல் எல்லையில் வைத்து தடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் வந்த பந்தை அவரின் சக முன்களவீரரான மொஹமட் சாலா கோலாக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருந்தும், அவர் உதைந்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், போட்டியின் இறுதிக் கணங்களில், மாற்றுவீரராகக் களமிறங்கிய பார்சிலோனாவின் முன்களவீரரான உஸ்மான் டெம்பிலி, 4-0 என்ற கோல் கணக்கில் குறித்த போட்டியை முடித்துக் கொள்ளும் வாய்ப்பைக் கொண்டிருந்தபோதும், கோல் கம்பத்திலிருந்து சில அடி தூரத்திலிருந்தான கோல் கம்பத்தை நோக்கிய தனது உதையை நேராக லிவர்பூலின் கோல் காப்பாளர் அலிஸனிடம் செலுத்த இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.

இப்போட்டியின் முதற்பாதியில், தனதணித்தலைவரும் சக மத்தியகளவீரருமான ஜோர்டான் ஹென்டர்சன் வழங்கிய பந்தை கோல் கம்பத்திலிருந்து எட்டு அடி தூரத்திலிருந்து லிவர்பூலின் முன்களவீரர் சாடியோ மனே செலுத்திய உதையானது கோல் கம்பத்துக்கு மேலால் சென்றதுடன், இரண்டாவது பாதியில், லிவர்பூலின் இன்னொரு மத்தியகளவீரரான ஜேம்ஸ் மில்னரின் உதையை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க் அன்ட்ரே டிய ஸ்டீகன் தடுத்திருந்தோடு, மொஹமட் சாலாவின் உதையை வலப்பக்கமாக கீழே பாய்ந்து ஒரு கையால் தடுத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .