2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகள்: தோற்றது லிவர்பூல்

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் குழுநிலைப் போட்டிகளில், ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், சேர்பியக் கழகமான றெட் ஸ்டார் பெல்கிரேட், பெல்ஜியக் கழகமான கிளப் புரூகே உள்ளிட்ட வென்றுள்ளன.

தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற குழு சி போட்டியொன்றில் றெட் ஸ்டார் பெல்கிரேட் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலை வென்றது. றெட் ஸ்டார் பெல்கிரேட் அணி சார்பாகப் பெறப்பட்ட கோல்களை மிலான் பவ்கோவ் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டை அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, சாவுல் நிகூஸ், அன்டோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், வெம்ப்ளி மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற நெதர்லாந்துக் கழகாமன பி.எஸ்.வி ஐந்தோவன் அணியுடனான குழு பி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொடென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஹரி கேன் பெற்றதோடு, பி.எஸ்.வி ஐந்தோவன் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை லுக் டி ஜொங் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கிளப் புரூகே அணியுடனான குழு ஏ போட்டியொன்றில் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோ சம்பியன்ன்ஸ் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. கிளப் புரூகே சார்பாக, ஹன்ஸ் வனகென் இரண்டு கோல்களையும் வெஸ்லி மொறாயஸ், றுட் வோர்மர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் ஸ்பானிய லா லிகாக் கழகமான பார்சிலோனாவுக்குமிடையிலான குழு பி போட்டியொன்று 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை மல்கொம் பெற்றிருந்ததோடு, இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மெளரோ இகார்டி பெற்றிருந்தார்.

அந்தவகையில், குழுநிலைப் போட்டிகள் இன்னுமிரண்டு மீதமிருக்கின்ற நிலையிலேயே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு குறித்த போட்டியுடன் பார்சிலோனா தகுதிபெற்றுள்ளது.

இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணிக்கும் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் அணிக்குமிடையிலான குழு சி போட்டியொன்று 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜுவான் பேர்னாட் பெற்றதோடு, நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ இன்சீனியா பெற்றார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .