2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாமர சில்வாவுக்கு 2 ஆண்டுகள் தடை

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வா உள்ளிட்ட, இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்கள், பயிற்றுநர்கள், அணி நிர்வாகிகள் ஆகியோருக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால்,  தடை விதிக்கப்பட்டுள்ளது. சாமர சில்வாவுக்கும் மனோஜ் தேஷப்பிரியவுக்கும் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்ட அதேவேளை, ஏனையோருக்கு ஓராண்டுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், போட்டி நிர்ணயம் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற பின்னணியிலேயே, இத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதற்தர கிரிக்கெட் தொடரான பிறீமியர் லீக் தொடரின், “பி” பிரிவுக்கான போட்டியில், களுத்துறை பௌதீக கலாசார கழகத்துக்கும் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான போட்டியிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில், இரு அணிகளும் விளையாடிய விதத்தைத் தொடர்ந்து, அதிகமான ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன. போட்டி முடிவில், பாணந்துறை அணி, பிரிவு “ஏ”க்கு தரமுயர்த்தப்பட்டதுடன், களுத்துறை அணி, பிறீமியர் லீக் பிரிவிலிருந்து தரமிறக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டது.

எனினும், இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை அணி, தமது எதிர்ப்பைப் பதிவுசெய்தது.

இதைத் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், இரண்டு அணிகளின் தலைவர்களுக்கும், தலா 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய வீரர்கள், பயிற்றுநர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு, தலா ஓர் ஆண்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பங்குபற்றிய அனைவரினதும் போட்டி ஊதியங்கள் மீளப் பெறப்படவுள்ளதோடு, அணிகளுக்குத் தலா 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியின் முடிவு, இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை அணி, “பி” பிரிவிலேயே மீண்டும் காணப்படவுள்ள அதேநேரத்தில், துறைமுக அணி, “ஏ” பிரிவுக்குச் செல்லவுள்ளது. அதேபோன்று, களுத்துறை அணி, சாரா கிண்ணத்தில் விளையாடவுள்ளது.

வீரர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் தண்டனைகள் அறிவிக்கப்பட்ட அதேநேரத்தில், போட்டியின் உத்தியோகத்தர்கள் (நடுவர்கள், போட்டி மத்தியஸ்தர்கள்) ஏன், எந்தவிதமான நடவடிக்கைகயையும் எடுக்கவில்லை என்பது தொடர்பாக, விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதில், பாணந்துறை அணித் தலைவர் சாமர சில்வா, இந்தத் திட்டத்துக்கு ஒத்துப் போகாமலேயே, 3ஆவது நாளில் பங்குபற்றவில்லை என்று கூறப்பட்ட போதிலும், அதை நிராகரித்த இலங்கை கிரிக்கெட் சபை, இவ்விடயம் குறித்து, கிரிக்கெட் சபையிடம் அவர் அறிவிக்கத் தவறிவிட்டார் எனவும், விசாரணைகளின் போதும் இவ்விடயத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .