2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிம்பாப்வேயை வென்றது இலங்கை

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான, ஒற்றை டெஸ்ட் போட்டியில், சாதனை வெற்றியைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி, சிம்பாப்வே அணியிடம் தோற்பதிலிருந்து தப்பித்ததோடு மாத்திரமல்லாது, வரலாற்றுப் புத்தகங்களிலும் இடம்பிடித்துக் கொண்டது. 

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியின் 5ஆவது நாளான நேற்று, 388 என்ற இலக்கை நோக்கி, 3 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுடன், இலங்கை அணி தொடர்ந்தது. நாளை ஆரம்பித்த துடுப்பாட்ட வீரர்களான குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோரை, விரைவாகவே இழந்த இலங்கை, 5 விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில், 185 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. 

அப்போது இணை சேர்ந்த நிரோஷன் டிக்வெல்லவும் அசேல குணரட்னவும், விரைவாகவும் பொறுப்பாகவும் விளையாடி, 121 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். டிக்வெல்ல ஆட்டமிழந்த பின்னர், அசேலவுடன் இணை சேர்ந்த டில்ருவான் பெரேரா, பிரிக்கப்படாத 67 ஓட்டங்களைப் பகிர்ந்து, இலங்கையின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 

இலங்கை அணி, மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அதிர்ஷ்டமும் இலங்கை அணியின் வசமிருந்தது. சிம்பாப்வே அணி தவறவிட்ட வாய்ப்புகளைத் தவிர, நிரோஷன் டிக்வெல்ல, 37 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, ஸ்டம்பிங் வாய்ப்பொன்று, 3ஆவது நடுவரிடம் கோரப்பட்டது. மீள் ஒளிபரப்புக் காட்சிகளின் போது, டிக்வெல்ல ஆட்டமிழந்துவிட்டார் என்றே கருதப்பட்ட போதிலும், சர்ச்சைக்குரிய விதத்தில், அது ஆட்டமிழப்புக் கிடையாது என, 3ஆவது நடுவர் அறிவித்தார்.  

ஆனால், அதிர்ஷ்டங்களுக்கு மத்தியில், டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவுக்கு அனுபவம் இல்லாத வீரர்களான டிக்வெல்லவும் அசேலவும் விளையாடிய விதம், அணியின் சிரேஷ்ட வீரர்களுக்குப் பாடம் கற்பிப்பது போன்று அமைந்திருந்தது. 

இலங்கை அணியின் இந்த வெற்றி, இலங்கையில் மாத்திரமன்றி, ஆசியக் கண்டத்திலேயே, 4ஆவது இனிங்ஸில் அதிக ஓட்டங்கள் துரத்தியடிக்கப்பட்ட சந்தர்ப்பம் என்ற சாதனையைப் படைத்தது. அதேபோல், டெஸ்ட் வரலாற்றிலேயே, 4ஆவது இனிங்ஸில்  துரத்தியடிக்கப்பட்டதில், 5ஆவது அதிக ஓட்டங்கள் என்ற சாதனையையும், இலங்கை படைத்தது. 

அத்தோடு, இந்தப் போட்டியின் அனைத்து இனிங்ஸ்களிலும், இரண்டு அணிகளுமே, 300க்கும் 400க்கும் இடைப்பட்ட ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டன. இவ்வாறான சந்தர்ப்பம், டெஸ்ட் வரலாற்றிலேயே 3ஆவது தடவையாக இப்போட்டியில் இடம்பெற்றது.   

 

ஸ்கோர் விவரம்...

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 356/10 (94.4 ஓவ.) (துடுப்பாட்டம்: கிறெய்க் ஏர்வின் 160, மல்கொம் வோலர் 36, சீகன்டர் ராஸா 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 5/116, அசேல குணரட்ன 2/28, லஹிரு குமார 2/68)

இலங்கை: 346/10 (102.3 ஓவ.) (துடுப்பாட்டம்: உபுல் தரங்க 71, டினேஷ் சந்திமால் 55, அசேல குணரட்ன 45, அஞ்சலோ மத்தியூஸ் 41, டில்ருவான் பெரேரா 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேம் கிறீமர் 5/125, ஷோன் வில்லியம்ஸ் 2/62)

சிம்பாப்வே: 377/10 (107.1 ஓவ.) (துடுப்பாட்டம்: சீகன்டர் ராஸா 127, மல்கொம் வோலர் 68, கிறேம் கிறீமர் 48, பீற்றர் மூர் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 6/133, டில்ருவான் பெரேரா 3/95)

இலங்கை: 391/6 (114.5 ஓவ.) (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல 81, அசேல குணரட்ன ஆ.இ 80, குசல் மென்டிஸ் 66, திமுத் கருணாரத்ன 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறேம் கிறீமர் 4/150, ஷோன் வில்லியம்ஸ் 2/146)

போட்டியின் நாயகன்: அசேல குணரட்ன

தொடரின் நாயகன்: ரங்கன ஹேரத்

தொடர்: இலங்கை 1-0


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .