2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிற்றி, யுனைட்டெட், லிவர்பூல் வென்றன

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, லெரோய் சனே, கப்ரியல் ஜெஸூஸ், ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்டிருந்த கோலை யனிக் பொலைஸே பெற்றார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற சுவான்சீ சிற்றி அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, றொமேலு லுக்காக்கு, அலெக்ஸிஸ் சந்தேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், கிறிஸ்டல் பலஸ் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாக சாடியோ மனே, மொஹமட் சாலா ஆகியோர் ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, கிறிஸ்டல் பலஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகா மிலிவோஜெவிக் பெற்றார்.

அந்தவகையில், தமது மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தமது வைரிகளான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றால் இப்பருவகால இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை மன்செஸ்டர் சிற்றி கைப்பற்றுமென்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலுள்ள மன்செஸ்டர் சிற்றி 84 புள்ளிகளையும் இரண்டாமிடத்திலுள்ள மன்செஸ்டர் யுனைட்டெட் 68 புள்ளிகளையும் கொண்டு காணப்படுக்கின்றன.

ஆகவே, மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கெதிரான குறித்த போட்டியில் வெற்றிபெற்றால் 87 புள்ளிகளை மன்செஸ்டர் சிற்றி அடைந்துவிடும். அதன்பின்னர் தமக்கு எஞ்சியிருக்கும் ஆறு போட்டிகளிலும் மன்செஸ்டர் சிற்றி தோற்று புள்ளிகளெதையும் பெறாமல் போய், தனக்கு எஞ்சியிருக்கும் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 18 புள்ளிகளைப் பெற்று 86 என்ற மொத்த புள்ளிகள் எண்ணிக்கையை மன்செஸ்டர் யுனைட்டெட் அடைந்தாலும் மன்செஸ்டர் சிற்றியை முந்த முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X