2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுப்பர் ஓவரில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில், சுப்பர் ஓவரில் வென்ற இந்தியா இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது. 

இரண்டு அணிகளுக்குமிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த இந்தியா, ஹமில்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். 

நியூசிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பிளையர் டிக்னரை ஸ்கொட் குக்லஜின் பிரதியிட்டிருந்தார். 

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா, தமது ஆரம்பத்துடுப்பாட்டவீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் இவர்களையும், அடுத்து வந்த ஷிவம் டுபேயையும் அடுத்தடுத்து கொலின் டி கிரான்ட்ஹொம், ஹமிஷ் பெனிட்டிடம் இழந்தது.

பின்னர் குறிப்பிட்ட இடைவேளையில் ஷ்ரேயாஸ் ஐயரை மிற்செல் சான்ட்னெரிடம் பறிகொடுத்த நிலையில், அணித்தலைவர் விராட் கோலி, மனிஷ் பாண்டே, இரவீந்திர ஜடேஜா பெற்ற ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 180 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மார்டின் கப்திலின் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றபோதும், அடுத்தடுத்து மார்டின் கப்தில், கொலின் மன்றோவை ஷர்துல் தாக்கூர், இரவீந்திர ஜடேஜாவிடம் இழந்தது.

தொடர்ந்து வந்த மிற்செல் சான்ட்னெர், கொலின் டி கிரான்ட்ஹொம் ஆகியோர் யுஸ்வேந்திர சஹால், ஷர்துல் தாக்கூரிடம் வீழ்ந்தபோதும் தனித்து நின்று போராடிய கேன் வில்லியம்சன் வெற்றிப்பாதைக்கு நியூசிலாந்தை அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், மொஹமட் ஷமி வீசிய இறுதி ஓவரில் ஒன்பது ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முதலாவது பந்தில் ஆறு ஓட்டங்களைப் பெற்ற றொஸ் டெய்லர், அடுத்த பந்தில் ஓர் ஓட்டத்தைப் பெற்ற நிலையில் இரண்டு ஓட்டங்களே நியூசிலாந்தின் வெற்றிக்குத் தேவைப்பட்ட நிலையில் நான்கு பந்துகள் இருந்தன.

 மூன்றாவது பந்தில் கேன் வில்லியம்சனின் விக்கெட்டைக் கைப்பற்றிய மொஹமட் ஷமி, நான்காவது பந்தில் ஓட்டமெதனையும் வழங்கியிருக்கவில்லை. ஐந்தாவது பந்து துடுப்பில் படாதபோதும் ஓர் ஓட்டத்தை பெற்ற நியூசிலாந்து, இறுதிப் பந்தில் றொஸ் டெய்லரின் விக்கெட்டை மொஹமட் ஷமி கைப்பற்ற போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

அந்தவகையில், ஜஸ்பிரிட் பும்ரா வீசிய சுப்பர் ஓவரில் கேன் வில்லியம்சனும், மார்டின் கப்திலும் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு, 18 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய, டிம் செளதி வீசிய ஓவரில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் மூலம் 20 ஓட்டங்களைப் பெற்று போட்டியை வென்றது.

இப்போட்டியின் நாயகனாக கேன் வில்லியம்சன் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இந்தியா: 179/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 65 (40), விராட் கோலி 38 (27), லோகேஷ் ராகுல் 27 (19), ஷ்ரேயாஸ் ஐயர் 17 (16), மனிஷ் பாண்டே ஆ.இ 14 (06), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 10 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹமிஷ் பெனிட் 3/54 [4], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/13 [2], மிற்செல் சான்ட்னெர் 1/37 [4], இஷ் சோதி 0/23 [4])

நியூசிலாந்து: 179/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 95 (48), மார்டின் கப்தில் 31 (21), றொஸ் டெய்லர் 17 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 2/32 [4], ஷர்துல் தாக்கூர் 2/21 [3], இரவீந்திர ஜடேஜா 1/23 [4], யுஸ்வேந்திர சஹால் 1/36 [4])

சுப்பர் ஓவர்:

நியூசிலாந்து: 17/0 (1 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் ஆ.இ 11 (04), மார்டின் கப்தில் ஆ.இ 05 (02) ஓட்டங்கள்)

இந்தியா: 20/0 (1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா  ஆ.இ 15 (04), லோகேஷ் ராகுல் 05 (02) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .