2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுப்பர் கிண்ணத்தை வென்றது லிவர்பூல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது கோல் காப்பாளர் அட்ரியன் பெனால்டியொன்றைத் தடுத்து நாயகனாக ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணத்தை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்கும், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோப்பா லீக்கின் நடப்புச் சம்பியனுக்குமிடையே துருக்கியின் இஸ்தான்புல்லில் நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த போட்டியில் பெனால்டியிலேயே லிவர்பூல் வென்றிருந்தது.

இப்போட்டியின் 36ஆவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரரான என்கலோ கன்டே மத்தியகளத்திலிருந்து கொடுத்த பந்தைப் பெற்ற முன்களவீரரான கிறிஸ்டியன் புலிசிச், சக முன்களவீரர் ஒலிவர் ஜிரூட்டிடம் வழங்க அவர் அதைக் கோலாக்க செல்சி முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் 48ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய லிவர்பூலின் முன்களவீரரான றொபேர்ட்டோ ஃபெர்மினோ வழங்கிய பந்தை, அவரின் சக முன்களவீரரான சாடியோ மனே கோலாக்க கோலெண்ணிக்கையை லிவர்பூல் சமப்படுத்தியது.

இந்நிலையில், வழமையான நேரத்தில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், மேலதிக நேரத்தில் 85ஆவது நிமிடத்தில் றொபேர்ட்டோ ஃபெர்மினோவுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு முன்னேறிய சாடியோ மனே கோலைப் பெற லிவர்பூல் முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், அடுத்த ஆறாவது நிமிடத்தில் செல்சியின் முன்களவீரரான தம்மி ஏப்ரஹாம், பெனால்டி பகுதிக்குள் வைத்து அட்ரியனால் வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை செல்சியின் மத்தியகளவீரரான ஜோர்ஜினியோ கோலாக்க கோலெண்ணிக்கையைச் செல்சி சமப்படுத்தியது.

அந்தவகையில் மேலதிக நேரத்திலும் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பெனால்டியில் லிவர்பூல் சார்பாக றொபேர்ட்டோ ஃபெர்மினோ, ஃபபின்ஹோ, டிவோக் ஒரிஜி, ட்ரெண்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட், மொஹமட் சாலா ஆகியோர் கோல் கம்பத்துக்குள் பந்தைச் செலுத்திய நிலையில், செல்சி சார்பாக ஜோர்ஜினியோ, றொஸ் பார்க்லி, மேஸன் மெளன்ட், எமெர்சன் பல்மீரி ஆகியோர் கோல் கம்பத்துக்குள் உட்செலுத்தியபோதும் தம்மி ஏப்ரஹாமின் பெனால்டியை அட்ரியன் தடுத்திருந்த நிலையில் 5-4 என்ற ரீதியில் பெனால்டி மூலம் லிவர்பூல் வென்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .