2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜப்பானிய குரான் பிறீயை வென்றார் போத்தாஸ்

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய குரான்ட் பிறீயை மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநர் வல்ட்டேரி போத்தாஸ் வென்றிருந்ததோடு, இரண்டாமிடம் பெற்ற ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநர் செபஸ்டியன் வெட்டலுக்கு அடுத்ததாக மூன்றாமிடத்தை மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் பெற்ற நிலையில், ஆறாவது தொடர்ச்சியான ஆண்டாக சாதனையாக அணிக்கான உலக சம்பியன்ஷிப் பட்டத்தை மெர்சிடீஸ் அணி பெற்றுக் கொண்டது.

இன்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தை தவிர இவ்வாண்டு ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்பில் இன்னும் நான்கு பந்தயங்கள் இருக்கையிலேயே அணிக்கான சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள மெர்சிடீஸ் அணி, ஃபெராரி அணியும் ஜேர்மனிய ஓட்டுநரான மைக்கல் ஷுமாக்கரும் இணைந்து 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியதை முறியடித்துள்ளது.

இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த செபஸ்டியன் வெட்டல், இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த அவரின் சக பெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க் ஆகியோரை, பந்தயத்தின் ஆரம்பத்திலேயே பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த வல்ட்டேரி போத்தாஸ் முந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்தயம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆரம்பித்த செபஸ்டியன் வெட்டல் நிறுத்தி பின்னர் மீண்டும் ஆரம்பித்ததுடன், றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனுடன் சார்ள்ஸ் லெக்கலெர்க் மோதியிருந்தார்.

இப்பந்தயத்தில் நான்காமிடத்தை றெட் புல் அணியின் தாய்லாந்து ஓட்டுநரான அலெக்ஸான்டர் அல்போனும், ஐந்தாமிடத்தை மக்லரென் அணியின் ஸ்பெய்ன் ஓட்டுநரான கார்லோஸ் சைன்ஸ் ஜுனியரும் பெற்றிருந்தனர். ஆறாமிடத்தை சார்ள்ஸ் லெக்கலெர்க்கும், ஏழாமிடத்தை றெனோல்ட் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டேனியல் றிச்சியார்டோவும் பெற்றிருந்தனர்.

அந்தவகையில், இப்பந்தயத்தின் முடிவில் இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் 338 புள்ளிகளுடன் முதலிடத்தில் லூயிஸ் ஹமில்டன் காணப்படுகின்றார். அவரை விட 62 புள்ளிகள் குறைய்வாக 274 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் வல்ட்டேரி போத்தாஸ் காணப்படுகின்றார். 223 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் சார்ள்ஸ் லெக்கலெர்க்கும், 212 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மக்ஸ் வெர்ஸ்டப்பனும், 212 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் செபஸ்டியன் வெட்டலும் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .