2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜாம்பவானின் சோக முடிவு

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் தோன்றிய மிகச்சிறந்த மெய்வல்லுநர் வீரர்களுள் ஒருவராகவும், உலகில் தோன்றிய மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுள் ஒருவராகவும் கருதப்படும், ஜமைக்காவின் உசைன் போல்ட், தன்னுடைய இறுதி ஓட்டத்தில், காயம் காரணமாக, போட்டியை நிறைவுசெய்ய முடியாமலேயே போனது.

தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசச் சங்கத்தின் உலக சம்பியன்ஷிப் போட்டிகள், இலண்டனில் இடம்பெற்று வருகின்றன. இதில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை, ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி இடம்பெற்றது.

இதில், ஜமைக்க அணியும் தகுதிபெற்றிருந்த நிலையில், உலகின் அதிவேகமான மனிதரான உசைன் போல்ட், வெற்றியுடன் விடைபெறும் எதிர்பார்ப்புடன் களமிறங்கினார்.

அஞ்சலோட்டத்தை முடித்துவைக்கும் வீரராகக் காணப்பட்ட உசைன் போல்ட், 3ஆவது வீரரிடமிருந்து கோலை வாங்கிய போதிலும், ஓடும் போது, அவர் உபாதைக்கு உள்ளாகி, கீழே விழுந்தார். அவருக்கு, பின்தொடைத் தசைநார் உபாதை ஏற்பட்டது போன்று தென்பட்டது. இதனால், போட்டியை முடித்துக் கொள்ள முடியாமல் போனது.

அவர் அவ்வாறே நிலத்தில் வீழ்ந்து கிடக்க, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சக்கரக் கதிரை அழைக்கப்பட்ட போதிலும், அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார். தனது அணியைச் சேர்ந்த ஏனைய மூவரின் உதவியுடனும், அவர் களத்தை விட்டு வெளியேறினார்.

இறுதியில், பெரிய பிரித்தானிய அணிக்கு முதலிடமும் ஐ.அமெரிக்க அணிக்கு 2ஆம் இடமும் ஜப்பான் அணிக்கு 3ஆவது இடமும் கிடைத்தன.

ஏற்கெனவே, அவரது தனிப்பட்ட ஓட்டமாக அமைந்த 100 மீற்றர் ஓட்டத்தில், 3ஆவது இடத்தைப் பெற்ற போல்ட், தனது இறுதிப் போட்டியாக அமைந்த இப்போட்டியிலாவது வெற்றியைப் பெற எதிர்பார்த்திருந்த நிலையில், அதுவும் முடியாமல் போனது.

எனினும், அஞ்சலோட்டத்தின் இறுதி நபராக, கோலை அவர் பெற்ற போதே, அவரது அணி, 3ஆவது இடத்தில் பின்தங்கியே காணப்பட்டது. எனவே, அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்காவிடினும், ஜமைக்கா அணியால் முதலிடத்தைப் பெற்றிருக்க முடியுமா என்பது சந்தேகமாகவே அமைந்தது.

போட்டியின் பின்னர், தனது அணி வீரர்களிடம், அவர் தொடர்ச்சியாக மன்னிப்புக் கோரியதாகத் தெரிவித்த சக வீரரான ஜூலியன் ஃபோர்ட்டே, காயங்கள் என்பன, விளையாட்டின் ஓர் அங்கம் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .