2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜேர்மனி – ஆர்ஜென்டீனா போட்டி சமநிலை

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் இன்று அதிகாலை நடைபெற்ற ஜேர்மனிக்கும், ஆர்ஜென்டீனாவுக்குமிடையிலான சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியானது சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இப்போட்டியின் 15ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற ஜேர்மனியின் முன்களவீரர் சேர்ஜி நர்பி தனதணிக்கு முன்னிலையை வழங்கியதுடன், அடுத்த ஏழாவது நிமிடத்தில் அவர் கொடுத்த பந்தை அவரின் சக மத்தியகளவீரரான கை ஹவெர்ட்ஸ் கோலாக்க தமது முன்னிலையை ஜேர்மனி இரட்டிப்பாக்கியிருந்தது.

இதைத் தொடர்ந்து ஜேர்மனியின் மத்தியகளவீரர் மார்செல் ஹல்ஸ்டென்பேர்க்கின் பிறீ கிக்கொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்த நிலையில், ஆர்ஜென்டீனாவின் மத்தியகளவீரர் றொட்றிகோ டி போல், கோல் கம்பத்திலிருந்து நீண்ட தூரத்திலிருந்து கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையும் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய தமது முன்களவீரர் லூகாஸ் அலாரியோ போட்டியின் 66ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் கோல் வித்தியாசத்தை ஒன்றாகக் குறைத்த ஆர்ஜென்டீனா, 85ஆவது நிமிடத்தில் அவர் வழங்கிய பந்தை மாற்றுவீரராகக் களமிறங்கிய இன்னொரு முன்களவீரரான லூகாஸ் ஒகம்பொஸ் கோலாக்கிய நிலையில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியைச் சமநிலையில் முடித்திருந்தது.

இடைநிறுத்தத்தை எதிர்கொண்டுள்ள ஆர்ஜென்டீனாவின் அணித்தலைவரும் நட்சத்திர முன்களவீரருமான லியனல் மெஸ்ஸி இப்போட்டியில் பங்கேற்றிருக்காத நிலையில், காயம் காரணமாக ஜேர்மனியின் மத்தியகளவீரரான டொனி க்றூஸும் இப்போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .