2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜோக்கோவிச்சை வென்று சம்பியனானார் நடால்

Editorial   / 2019 மே 21 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் தலைநகர் றோமில் இடம்பெற்றுவந்த இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் தனிநபர் ஆண்களில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் சம்பியனானார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை வென்றே ரபேல் நடால் சம்பியனானார்.

இப்போட்டியின் முதலாவது செட்டை 6-0 என ரபேல் நடால் கைப்பற்றியிருந்த நிலையில், நொவக் ஜோக்கோவிச்சுடனான போட்டியில் 6-0 என செட்டொன்றை ரபேல் நடால் கைப்பற்றிய முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது.

எனினும், சுதாகரித்துக் கொண்ட நொவக் ஜோக்கோவிச், 4-6 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றியபோதும், 6-1 என ஆதிக்கம் செலுத்தி மூன்றாவது செட்டைக் கைப்பற்றிய ரபேல் நடால் சம்பியனானார்.

தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் முறையே உலகின் ஆறாம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மன் ஆகியோரை வென்றே ரபேல் நடாலும், நொவக் ஜோக்கோவிச்சும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிருந்தனர்.

இந்நிலையில், தனிநபர் பெண்களில் உலகின் தற்போதைய இரண்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சம்பியனானார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பிரித்தானியாவின் ஜொஹன்னா கொன்டாவை எதிர்கொண்ட கரோலினா பிளிஸ்கோவா, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.

தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் முறையே உலகின் நான்காம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், கிரேக்கத்தின் மரியா சக்கரி ஆகியோரை வென்றே ஜொஹன்னா கொன்டாவும், கரோலினா பிளிஸ்கோவாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தனர்.

அந்தவகையில், இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தரவரிசையில் ஏழாமிடத்தில் காணப்பட்ட கரோலினா பிளிஸ்கோவா, இத்தொடரில் சம்பியனானதன் மூலம் நேற்று (20) வெளியான தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .