2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டேவிட் டி கியாவின் தவறால் யுனைட்டெட்டுடனான போட்டியைச் சமப்படுத்தியது செல்சி

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டேவிட் டி கியா விட்ட தவறால் அவ்வணியுடனான போட்டியை செல்சி சமப்படுத்தியது.

தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த போட்டியை சிறப்பாக ஆரம்பித்த மன்செஸ்டர் யுனைட்டெட், தமது பின்களவீரர் லுக் ஷா வழங்கிய பந்தை, முன்களவீரரான றொமெலு லுக்காக்கு கோல் கம்பத்தை நோக்கி உதைந்திருந்தபோதும், அதை செல்சியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலாகா தடுத்திருந்தார்.

இந்நிலையில், செல்சியின் பின்களத்துக்கு மேலால் றொமெலு லுக்காக்கு வழங்கிய பந்தை, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான ஜுவான் மாத்தாவிடம் லுக் ஷா வழங்க அவர் அதைக் கோலாக்க மன்செஸ்டர் யுனைட்டெட் முன்னிலை பெற்றது.

அந்தவகையில், இதைத் தொடர்ந்து மூலையுதையொன்றின் மூலம் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னிலையை இரட்டிப்பாக்கும் வாய்ப்பை அவ்வணியின் பின்களவீரர் எரிக் பெய்லி கொண்டிருந்தபோதும் அவர் அதைத் தவறவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து முதல் பாதி முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருக்கையில், கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்திலிருந்து செல்சியின் பின்களவீரர் அன்டோனி ருடிகர் உதைந்த உதையை டேவிட் டி கியா கைப்பற்றத் தவற, அதைக் கோலாக்கிய செல்சியின் இன்னொரு பின்களவீரரான மார்கோஸ் அலோன்ஸோ, கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் கோல் பெறும் வாய்ப்புகளை அவ்வளவாக செல்சி கொண்டிருக்காத நிலையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்களவீரரான மார்கோஸ் றோஜோ, கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டிய பந்தை, மாற்றுவீரராகக் களமிறங்கிய செல்சியின் மத்தியகளவீரர் பெட்ரோ தடுத்திருந்தார்.

இதேவேளை, போட்டியின் இறுதிக் கட்டத்தில் செல்சியின் முன்களவீரரான கொன்ஸலோ ஹியூகைனின் கோல் கம்பத்தை நோக்கியதான உதையைத் தடுத்திருந்த டேவிட் டி கியா செல்சியின் வெற்றியைத் தடுத்திருந்த நிலையில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், பேர்ண்லியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், சேர்ஜியோ அகுரோ பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளது.

இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோல்வியடைந்திருந்தது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, ஜேமி வார்டி இரண்டு கோல்களையும், யூரி டிலிமான்ஸ் ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்தில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதமுள்ள நிலையில் அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

  1. மன்செஸ்டர் சிற்றி 92 புள்ளிகள்
  2. லிவர்பூல் 91 புள்ளிகள்
  3. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 70 புள்ளிகள்
  4. செல்சி 68 புள்ளிகள்
  5. ஆர்சனல் 66 புள்ளிகள்
  6. மன்செஸ்டர் யுனைட்டெட் 65 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .