2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டொட்டென்ஹாமை வென்று மீண்டும் முதலிடத்தில் லிவர்பூல்

Editorial   / 2019 ஏப்ரல் 01 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு லிவர்பூல் முன்னேறியுள்ளது.

தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு லிவர்பூல் முன்னேறியது.

இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில், சக பின்கள வீரர் அன்றூ றொபேர்ட்ஸனிடமிருந்து பெற்ற பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய லிவர்பூலின் முன்களவீரர் றொபேர்ட்டோ ஃபெர்மினோ தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

முதற்பாதியில் லிவர்பூல் சிறப்பாக விளையாடியிருந்தபோதும் மேலதிகமாக கோலெதுவும் பெறப்படாத நிலையில் முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், முன்கள வீரரான ஹரி கேன், பின்கள வீரர் கெய்ரான் ட்ரிப்பியர், மத்தியகளவீரர் கிறிஸ்டியன் எரிக்ஸனின் பங்களிப்பில் வந்த பந்தை அவ்வணியின் இன்னொரு முன்கள வீரரான லூகாஸ் மோரா போட்டியின் 70ஆவது நிமிடத்தில் கோலாக்க கோலெண்ணிக்கையை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சமப்படுத்தியது.

அந்தவகையில், போட்டி முடிவடையும் தறுவாயில் கோல் பெறும் வாய்ப்பொன்றை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மத்தியகளவீரரான மூஸா சிஸாகோ தவறவிட்டிருந்த நிலையில், லிவர்பூலின் முன்கள வீரரான மொஹமட் சாலா கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டிய பந்தை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ் பிடிக்காமல் விட, அது அவ்வணியின் பின்கள வீரர் டொபி அல்டர்வெய்ட்டில் பட்டுக் கோலாகியதோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

அந்தவகையில், குறித்த போட்டியில் வென்றதன் மூலம் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் 79 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளபோதும், 77 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலுள்ள நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூலை விட ஒரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கார்டிஃப் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, ஓஃப் சைட்டிலிருந்து சீஸர் அத்பிலிகெட்டா, ருபென் லொவ்டஸ் சீக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், கார்டிஃப் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை விக்டர் காமரசா பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X