2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளுமா இலங்கை?

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இலங்கையணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டேர்பனில் இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 1.30 மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது டெஸ்டுடன் தொடங்குகின்றது.

அவுஸ்திரேலியாவில் மோசமான தோல்வி, அணிக்கு வெளியே, உள்ளே காணப்படும் பிரச்சினைகள் என ஓர் இக்கட்டான நிலையில் இத்தொடரில் இலங்கை களமிறங்குகின்றது.

வழமையான அணித்தலைவர் தினேஷ் சந்திமால் குழாமிலிருந்தே நீக்கப்பட்டு திமுத் கருணாரத்ன தலைமையில் இத்தொடரில் இலங்கை களமிறங்குகையில், ஏற்கெனவே துடுப்பாட்டவீரரொருவராக மிகுந்த பொறுப்பைக் கொண்டிருக்கின்ற அவருக்கு மேலதிக பொறுப்பு சேர்ந்திருக்கின்றது.

அந்தவகையில், டேல் ஸ்டெய்ன், வேர்ணன் பிலாந்தர், கஜிஸோ றபடா என அச்சுறுத்தும் பந்துவீச்சுவரிசையைக் கொண்டிருக்கின்ற தென்னாபிரிக்காவுக்கு சவால் விடுக்க வேண்டுமென்றால், திமுத் கருணாரத்னவுடன் குழாமில் கடந்த காலங்களில் காணப்படுகின்ற குசல் மென்டிஸும் நிரோஷன் டிக்வெல்லவும் பிரகாசிக்க வேண்டும்.

இதுதவிர, அண்மைய காலங்களில் உள்ளூர்ப் போட்டிகளில் பிரகாசித்த அஞ்சலோ பெரேரா, மிலிந்த சிரிவர்தன ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், தென்னாபிரிக்காவின் பந்துவீச்சை இவர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்பதிலேயே குழாமில் இவர்களின் இடம் நியாயப்படுத்தப்படும்.

பந்துவீச்சுப் பக்கமும் காயத்திலிருந்து குணமடைந்து மீள வருவாரென எதிர்பார்க்கப்படும் சுரங்க லக்மாலையே இலங்கை பிரதானமாக தங்கியுள்ளதுடன், இலங்கைக்கு சாதகமானதொரு விடயமாக தென்னாபிரிக்காவிலுள்ள ஆடுகளங்களில் டேர்பனே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாகக் காணப்படுவதுடன் இம்மைதானத்திலேயே இலங்கை தென்னாபிரிக்காவுக்கெதிராக பெற்ற ஒரேயொரு வெற்றி பெறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2011ஆம் ஆண்டு பெற்ற வெற்றியின்போது ரங்கன ஹேரத் என்ற சுழற்பந்துவீச்சு ஜாம்பவானை இலங்கை கொண்டிருந்தது. தற்போது, லக்ஷான் சந்தகானுடன், லசித் எம்புல்தெனிய என்ற புதுமுக சுழற்பந்துவீச்சாளரையே இலங்கை கொண்டிருகின்றது.

தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை, அண்மைய காலத்தில் தடுமாறியிருந்த விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக், சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் ஹஷிம் அம்லா ஆகியோரும் ஓட்டங்களைப் பெற ஆரம்பித்துள்ள நிலையில், அணித்தலைவர் பப் டு பிளெஸி, தெம்பா பவுமா என பலமானதாகவே காணப்படுகிறது. அணியின் இறுதித் துடுப்பாட்டவீரருக்கான தெரிவு தெனியுஸ் டி ப்ரூன், ஸுபைர் ஹம்ஸாவுக்கிடையில் காணப்படுகின்ற நிலையில் தமதிடங்களை உறுதிப்படுத்துவதற்கு தேர்வாகுபவர் ஓட்டங்களைப் பெற வேண்டும்.

பந்துவீச்சுப் பக்கமாக எவரைத் தெரிவுசெய்வதென்ற குழப்பம் காணப்படுகின்ற நிலையில், டேர்பன் ஆடுகளமென்பதால் கேஷவ் மஹராஜ் கட்டாயம் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் சிறப்பாக டுவன்னே ஒலிவர் செயற்பட்டபோதும் டேல் ஸ்டெய்ன், வேர்ணன் பிலாந்தர், கஜிஸோ றபாடா ஆகியோரே பந்துவீச்சுக் குழாமை பூர்த்தி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இத்தொடருக்கு முன்பாக இரண்டாமிடத்தில் தென்னாபிரிக்காவும் ஆறாமிடத்தில் இலங்கையும் காணப்படுகிறது. இத்தொடர் 0-0 என்றோ அல்லது 1-1 என சமமானால் இரண்டு அணிகளின் நிலையில் மாற்றம் வராது. தென்னாபிரிக்கா தொடரை 1-0 என்றோ அல்லது 2-0 என்றோ வென்றால், இலங்கை ஏழாமிடத்துக்கு கீழிறங்கும் என்பதோடு, இலங்கை 1-0 என்றோ அல்லது 2-0 என்றோ தொடரை வென்றால் மூன்றாமிடத்துக்கு தென்னாபிரிக்கா கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .