2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணி அதிரடி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நான்காவது நாளுடன், இப்போட்டி முடிவுக்கு வந்தது.

லோர்ட்ஸில் இடம்பெற்ற இப்போட்டியில், 4ஆவது நாளன்று, 331 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, வெறுமனே 36.4 ஓவர்கள் மாத்திரமே நிலைத்து, 119 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 211 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

எந்தவொரு துடுப்பாட்ட வீரரும், தென்னாபிரிக்கா சார்பாக 25 ஓட்டங்களைத் தாண்டியிருக்காத நிலையில், தொடரின் முதலாவது போட்டியில் கிடைத்த இந்தத் தோல்வி, தொடர் முழுவதும் அவ்வணியைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக, அணியின் பிரதான வேகப்பந்த வீச்சாளராக மாறியுள்ள கஜிஸ்கோ றபடா, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை தகாத வார்த்தைகளால் திட்டியதைத் தொடர்ந்து, அவருக்கு தண்டப் புள்ளியொன்று வழங்கப்பட்டது. ஏற்கெனவே 3 தண்டப் புள்ளிகளைக் கொண்டிருந்த அவர், 4 தண்டப் புள்ளிகளைப் பெற்று, அடுத்த டெஸ்டில் பங்குபற்றுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.

அவரது இழப்பு என்பது மிகப் பெரியதாக அமைய, தென்னாபிரிக்காவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான வேர்ணன் ஃபிலாந்தரின் கையில் பந்து தாக்கி, 3ஆவது நாள் முழுவதும் அவர் பந்துவீசவோ அல்லது களத்தடுப்பில் ஈடுபடவோ முடிந்திருக்கவில்லை. எனவே, அடுத்த போட்டிக்கு முன்னர் அவர் தயாராகி விடுவாரா என்ற சந்தேகமும் காணப்படுகிறது.

ஆனால், பிரசவ விடுப்புக் காரணமாக, முதலாவது டெஸ்டில் பங்குபற்றியிருக்காத அணித்தலைவர் ஃபப் டு பிளெஸி, அடுத்த போட்டியில் பங்குபற்றுவார் என அறிவிக்கப்படுகிறது. எனவே, அவ்வணிக்கான ஆறுதலாக, அது அமைந்துள்ளது.

அடுத்த போட்டி, நொட்டிங்காமில் 14ஆம் திகதி ஆரம்பித்து இடம்பெறவுள்ளது.

 

ஸ்கோர் விவரம்...

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 458/10 (105.3 ஓவ.) (துடுப்பாட்டம்: ஜோ றூட் 190, மொயின் அலி 87, ஸ்வேர்ட் ப்ரோட் ஆ.இ 57, பென் ஸ்டோக்ஸ் 56 ஓட்டங்கள். பந்துவீச்சு: மோர்னி மோர்க்கல் 4/115, வேர்ணன் ஃபிலாந்தர் 3/67, கஜிஸ்கோ றபடா 3/123)

தென்னாபிரிக்கா: 361/10 (105 ஓவ.) (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 59, டீல் எல்கர் 54, வேர்ணன் ஃபிலாந்தர் 52, குயின்டன் டீ கொக் 51, தெயுனிஸ் டி பிரையுன் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 4/59, ஜேம்ஸ் அன்டாசன் 2/44, ஸ்டுவேர்ட் ப்ரோட் 2/62, லியம் டவ்ஸன் 2/67)

இங்கிலாந்து: 233/10 (87.1 ஓவ.) (துடுப்பாட்டம்: அலஸ்டெயர் குக் 69, ஜொனி பெயர்ஸ்டோ 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 4/85, கஜிஸ்கோ றபடா 3/50, மோர்னி மோர்க்கல் 3/64)

தென்னாபிரிக்கா: 119/10 (36.4 ஓவ.) (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொய்ன் அலி 6/53, லியம் டவ்ஸன் 2/34)

போட்டியின் நாயகன்: மொய்ன் அலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X