2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை?

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டி, பல்லேகலயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோற்று தொடரை ஏற்கெனவே இழந்துள்ள இலங்கை, இப்போட்டியில் எவ்வாறாவது வென்று விட வேண்டும் என்ற மனநிலையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டு துறைகளிலும் இலங்கையணி தடுமாறிய நிலையில், இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் அல்லது இருவரே அரைச்சதத்தையே தாண்டுகின்றனர். இத்தொடரின் மூன்று போட்டிகளிலுமே உபுல் தரங்க, குசல் மென்டிஸ் ஆகியோர் பிரகாசிக்காதபோதும் குழாமில் வேறு துடுப்பாட்ட வீரர்கள் இல்லாத நிலையில் இவர்கள் இப்போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலசமயங்களில், குசல் மென்டிஸுக்குப் பதிலாக சகலதுறை வீரர் தசுன் ஷானக அணியில் இடம்பெறும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

பந்துவீச்சுப் பக்கம், சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரராக தனஞ்சய டி சில்வா அணியில் காணப்படுகின்ற நிலையில், இவரும் அகில தனஞ்சயவும் சுழற்பந்துவீச்சைக் கவனிக்க, மற்றைய சுழற்பந்துவீச்சாளரான பிரபாத் ஜெயசூரியவை வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, வலது தோட்பட்டையில் காயமடைந்த தென்னாபிரிக்க அணியின் தலைவர் பப் டு பிளெஸி, குறித்த போட்டியிலிருந்தும் அடுத்த போட்டியிலிருந்தும் ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியையும் தவறவிடவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் இலங்கையணியின் இனிங்ஸின் 10ஆவது ஓவரில் பிடியெடுப்பொன்றை எடுக்க முற்பட்டபோது மோசமாக வீழ்ந்திருந்த பப் டு பிளெஸி, உடனடியாகவே களத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

பப் டு பிளெஸி தவறவிடும் போட்டிகளுக்காக மேலதிக வீரர்கள் சேர்க்கப்படாத நிலையில், மூன்றாவது போட்டியில் பப் டு பிளெஸி களத்திலிருந்து வெளியேறிய பின்னர் அணியை வழிநடத்திய குயின்டன் டி கொக் தென்னாபிரிக்க அணிக்கு தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில், ஏய்டன் மர்க்ரம், பப் டு பிளெஸியை பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், தொடர் ஏற்கெனவே வெல்லப்பட்டுள்ள நிலையில், கஜிஸோ றபாடா, தப்ரையாஸ் ஷம்சி ஆகியோருக்குப் பதிலாக ஜூனியர் டலா, கேஷவ் மஹராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .